Header Ads



சர்வதேச மயப்படுத்துவதன், அவசியத்தை உணர்வோமா...?


(இன்றைய 06.12.2017 விடிவெள்ளி பத்திரிகையில், வெளியான ஆசிரியர் தலையங்கம்)

இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக தோல்வி கண்டுள்ளோம் என்பதையே அண்மைக்கால நகர்வுகள் சுட்டிநிற்கின்றன. 

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்கள் போதுமானளவு விவாதிக்கப்படுவதில்லை அல்லது அறவே கண்டுகொள்ளப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்து தொடராக முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். எனினும் இவற்றை உரிய இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை என்பதே யதார்த்தமாகும்.

ஓரிரு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பரிந்துரைகளில் இலங்கை முஸ்லிம் விவகாரங்களை ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்படுமளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இறுதியாக இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பூகோள மீளாய்வுக் கூட்டத்தொடரில் கூட இலங்கை முஸ்லிம் விவகாரங்களுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

இந் நிலையில்தான் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அலு­வ­ல­கத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­ல­கத்­திற்­கான ஆசிய பசுபிக் பிரிவின்  பிரதிப் பணிப்­பாளர் தோமஸ் குன­கேயை, சர்­வ­தேச யாழ்ப்­பாண முஸ்லிம் பிர­தி­நி­திகள் சந்தித்து இலங்கை முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் விளக்கினர். 

இதன்போது தோமஸ் குன­கே '' இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மற்றும் பாதிப்­புகள் குறித்து விப­ரங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவை வந்­த­டை­வ­தில்லை. இந்­நிலை மாற்­றப்­பட வேண்டும்'' என தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் ஜெனீவாவுக்குச் சென்ற போதிலும் உரிய தரப்புகளிடம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருக்கவில்லை. அல்லது அரசாங்கத்தின் சார்பிலேயே அவர்கள் ஜெனீவா சென்றிருந்தனர்.  அவ்வப்போது ஓரிரு தனி நபர்களும் குழுக்களும் ஜெனீவா சென்று இலங்கை முஸ்லிம்கள் சார்பில் முறைப்பாடுகளை முன்வைக்கின்ற போதிலும் அது ஒரு தொடரான வேலைத்திட்டமாக அமைவதில்லை. 

எனவேதான் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை சர்வதேசமயப்படுத்தவும் குறிப்பாக ஜெனீவா அமர்வுகளில் பங்கேற்று எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஜெனீவா வரை அரச சார்பற்ற நிறுவனங்களால் முயற்சிகளும் பிரசாரங்களும் முன்கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதேபோன்றுதான் ஏனைய உரிமைகள் சார் விடயங்கள் தொடர்பிலும் சர்வதேசமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சிவில் சமூகத் தலைமைகள் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு சர்வதேச இராஜதந்திர மற்றும் மொழி ஆற்றல் கொண்ட குழுவை நியமித்து நமது சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்த முன்வர வேண்டும். இது தொடர்பில் சகலரும் சிந்திப்பார்கள் என நம்புகிறோம்.

2 comments:

  1. இலங்கை அரசாங்கத்தில் அனைத்து (100%) முஸ்லிம் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். அதாவது முஸ்லிம் மக்கள் மட்டுமே அரசுக்கு 100% ஆதரவு கொடுக்கின்றனர். பின்னர் வெளிநாட்டில் அதே அரசுக்கு எதிராக குற்ற சாட்டு.

    உள்ளே 100% ஆதரவு, வெளியே குற்ற சாட்டுக்கள்!. இது சர்வதேசத்திற்கு நல்ல காமேடி!.

    உங்கள் பொய்களை அரபு நாடுகளே நம்புவதில்லை. எப்படி UN நம்பும்?

    ReplyDelete
    Replies
    1. Desa throgi, Tamil naatilaye eelathamilan eenathamilanaaha vaalgiraan. Neerum migrate aahum

      Delete

Powered by Blogger.