Header Ads



இணைப்பை தடுக்கும், அந்த இருவர் யார்..??

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணையவேண்டும் என்பதையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரும்புகிறார். எனவே, கூட்டு எதிரணியின் பின்புலத்திலுள்ள இருவரே இணைப்பை தடுத்துவருகின்றனர்'' என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு கூட்டு எதிரணிக்கும் சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், தனித்துக் களமிறங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டு எதிரணி இருப்பது தவறான செயலாகும்.

கூட்டு எதிரணி பக்கமுள்ள பலரும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதையே விரும்புகின்றனர்.

குறிப்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகக் களமிறங்க தினேஷ் குணவர்தன ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்கவில்லை. கூட்டணியிலிருந்து அவர்கள் விலகிச்செல்கின்றனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

எனினும், இருவர் மாத்திரமே இணைப்புக்கு தடையாக இருந்துவருகின்றனர். மஹிந்த, பஸில் ஆகியோர் அவ்விருவரும் இல்லை என்பதையும் கூறியாகவேண்டும். தடையாக இருக்கும் அந்த இரண்டு பேரும் விரைவில் பிரதிப்பலனை அனுபவிக்க நேரிடும். சுதந்திரக் கட்சியின் தலைவராக எதிர்காலத்தில் வரக்கூடும் என்ற கனவிலும் அவர்கள் இருக்கின்றனர்'' என்றார்.

No comments

Powered by Blogger.