Header Ads



தேர்தலின் பின், தேசிய அரசின் உடன்படிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரண்டு வருடம் தேசிய அரசில் பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்படிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் நிமிர்த்தம் உடன்படிக்கையை புதுப்பிக்கும் செயற்பாட்டை தேர்தல் முடிவடையும் வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சு.கவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவும் இணைந்து தேசிய அரசை அமைத்திருந்தன.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் நடைபெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாதமையால் மீண்டும் ஐ.தே.கவும், சு.கவும் இணைந்து தேசிய அரசை அமைத்திருந்தன. குறித்த உடன்படிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகுவதால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுக்கப்பட்டிருந்தன.


பிணைமுறி விவகாரம் மற்றும் இரு க ட்சிகளுக்கிடையே அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கருத்து ஒருமைப்பாட்டின்மை உள்ளிட்ட சில காரணங்களால் மீண்டும் தேசிய அரசை அமைக்க ஐ.தே.கவின் ஒரு தரப்பும், சு.கவின் ஒரு தரப்பும் தேசிய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருந்தன.

இவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நெருங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினையைத் தேர்தலுக்குப் பின்னர் தீர்வுகாண சு.கவின் மத்தியபீடம் முடிவுசெய்துள்ளது. எனவே, எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்தே உடன்படிக்கை குறித்த பேச்சுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதி தேசிய அரசு குறித்த உடன்படிக்கை காலாவதியாவதால் அதற்கு முன்னர் உடன்படிக்கையைப் புதுப்பிப்பது தொடர்பான பேச்சுகளை உயர்மட்டத்தில் முன்னெடுக்க சு.க. எண்ணியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.