December 06, 2017

ரோஹிங்கியர்கள் மீது தாக்குதல், சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமனல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மியான்மரில் இருந்து வங்காளதேசம் நாட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு கூட்டத்தின்போது உரையாற்றிய இவ்வமைப்பின் உயர் கமிஷனர் ஸெய்ட் ராட் அல் ஹுசேன் கூறியதாவது:-

ரோஹிங்கியா அகதிகளின் துயரத்தை நேரில் கேட்டறிவதற்காக இந்த அலுவலகம் மூன்று குழுக்களை அனுப்பி வைத்தது. இதன் மூலம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், வீடுகளுக்குள்ளே மக்களை வைத்து எரித்த கொடூரம், குழந்தைகளையும், இளம் வயதினரையும் கொன்றது மட்டுமின்றி உயிருக்கு பயந்து தப்பிச்சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கற்பழித்தது, வீடுகள்,பள்ளிக்கூடங்கள், சந்தைகள் மற்றும் மசூதிகளை எரித்தும், இடித்தும் நாசப்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்கள் அங்கு நடந்திருப்பது தெரியவந்தது.

ரோஹிங்கியா மக்களை ரோஹிங்கியாக்கள் என்றழைக்கவும், அவர்களுக்கான சுய அடையாளத்தை மதிக்கவும் அங்கீகரிக்கவும் சர்வதேச சமுதாயமும், அவர்கள் வாழும் நாடும் மறுத்து வருவதை மற்றொரு அவமரியாதை என்பது அவமானகரமான செயலாக கருத வேண்டியுள்ளது. 

தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாததாலும், மனிதநேயமற்ற முறையில் பாரபட்சமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டும், கொடூரமான முறையிலான வன்முறையால் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், திட்டமிட்டு கிராமங்கள், வீடுகள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் இன அழிப்புக்கான பங்கு இல்லை என்று யாராலும் புறந்தள்ள முடியுமா?

இவ்விவகாரங்கள் மிகவும் கவலைக்குரியவை. இதுதொடர்பாக உடனடியாக சீராய்வு செய்ய வேண்டியுள்ளதால் தகுதிவாய்ந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் இதற்கான சட்ட தீர்வை தர இயலும்.

எனவே, இதுதொடர்பாக உண்மையை கண்டறியவும், பாரபட்சமற்ற வகையில்  இதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க துணை புரியவும் சுதந்திரமான விசாரணை நடத்தும் ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை செய்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment