Header Ads



ஐ.நா விசாரணை அதிகாரி, நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை


-BBC-

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது.

மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல இருந்தார்.

அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

ரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று, ரக்கைனில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மியான்மருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி , ராணுவ முகாம் மற்றும் 30 போலீஸ் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், ராணுவத்தின் எதிர் தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது.

அப்போது முதல் 6,50,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், அதாவது மியான்மரில் வாழும் மூன்றில் இரண்டு ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்குத் தப்பி சென்றுள்ளனர்.

தன்னுடைய பயணத்திற்கு தடை விதித்து மியான்மர் எடுத்துள்ள முடிவு, தனக்கு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக லீ கூறியுள்ளார். முன்னதாக அவர் பல முறை மியான்மருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.

லீயின் பணி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.