Header Ads



சவூதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளவரை, மீட்டுத்தர குடும்பத்தினர் வேண்டுகோள்

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்குச் சென்ற தனது சகோதரியை, வீட்டு எஜமானி, நாட்டுக்கு அனுப்பாமலும் சம்பளம் வழங்காமலும், தொடர்பு கொள்ள முடியாமலும், மறைத்து வைத்திருப்பதால், அவரை மீட்டுத் தருமாறு, அப்பணிப்பெண்ணின் சகோதரி கந்தையா நிரோஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயமாக இன்று (19) ஊடகங்கள் வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்த அவர் மேலும் கூறியதாவது,

“மட்டக்களப்பு, புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (வயது 30) என்ற யுவதி, கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி, கொழும்பிலுள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று, சவூதி அரேபியா தமாமிலுள்ள முபாறக் பாலிஹ் முல்ஹி அல் அஜமி (Po. Box 1478, தொலைபேசி 0551979777) என்ற விவரமுடைய எஜமானனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

“ஆனால், தற்பொழுது நான்கரை வருடங்களாகியுள்ள போதிலும் எனது சகோதரியை எஜமானர்கள் நாடு திரும்ப அனுமதிக்கவேயில்லை.

“மேலும், அவர் வீட்டுப் பணிப்பெண்ணாக குறித்த எஜமானனின் வீட்டில் கடந்த 54 மாத காலத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

“தொலைபேசியூடாக  அவர் எங்களுடன் தொடர்புகொள்வதை, வீட்டு எஜமானர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

“தற்சயமம் எனது சகோதரியின் நிர்க்கதி நிலைக்கு ஒரு முடிவில்லாத நிலையில் பெற்றோர் இருவரும் சதா கவலைடன் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு விரக்தியடைந்து நோய்வாய்ப்பட்டுள்ளார்கள்.

“இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வ தொண்டர் நிறுவனம் உட்பட  கடைசியாக ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தோம்.

“ஆனால், எந்தவிதமான சாதகமான முடிவுகளும் இதுவரை கிடைக்கவில்லை. தயவுசெய்து, சகோதரியை மீட்டுத் தாருங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

No comments

Powered by Blogger.