Header Ads



டிரம்பின் முடிவுக்கு முழு உலகிலும் ஆர்ப்பாட்டம், இஸ்லாமிய கவுன்சில் கூடுவதற்கு எர்துகான் அழைப்பு


ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மத்திய கிழக்கு, ஆசியா, வட ஆபிரிக்கா எங்கும் பரவியது. பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு இந்த சர்ச்சைக்குரிய முடிவை எதிர்த்து வருகின்றனர்.

உலகின் பல பிரதான நகரங்களின் சதுக்கங்கள் மற்றும் வீதிகளில் கடந்த ஞாயிறன்று பலஸ்தீன கொடிகளை அசைத்தவாறு, பலஸ்தீனர்களுக்கும் தமது ஆதரவை வெளியிடும் கோசங்களுடன் மக்கள் ஒன்று திரண்டனர். ஜெரூசலம் தமது எதிர்கால பலஸ்தீன நாட்டின் தலைநகர் என பலஸ்தீனம் கருதுகிறது.

ஜெரூசலம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்திருப்பதோடு இந்த அறிவிப்புக்கு எதிராக ஐந்தாவது நாளாகவும் பலஸ்தீனத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, ஜெரூசலம் மற்றும் காசாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேலிய படையினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஞாயிறன்று 157 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரகடனத்தை அடுத்து காசாவில் குறைந்தது நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெரூசலம் பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடந்த ஞாயிறன்று இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது பலஸ்தீனர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் நடத்தினார். தாக்குதலுக்கு இலக்கான படை வீரர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறித்த பலஸ்தீன இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

மறுபுறம் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடினர். அந்த நகரின் யெனிகபி சதுக்கம் எங்கும் துருக்கி மற்றும் பலஸ்தீன கொடிகளை ஏந்தி மக்கள் வெள்ளம் திரண்டிருந்தனர்.

டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி எதிர்ப்பை வெளியிட்டு வருபவராக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை வரும் புதன்கிழமை கூடுவதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்புக்கு எதிரான கோசங்களுடன் மொரோக்கோ தலைநகர் ரபத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஜெரூசலம் பலஸ்தீனத்திற்கு சொந்தமானது என்ற பதாகைகளை காணமுடிந்தது.

எனினும் இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து வேறு வகையில் போராட்டம் இடம்பெற்றது. தலைநகரான சிறிநகரின் குடியிருப்பாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஞாயிறன்று அந்த நகர் வெறிச்சோடி காணப்பட்டது. “டிரம்பின் முடிவு நியாயமற்றது” என்று அந்த நகர குடியிருப்பாளரான சல்மான் கான் என்பவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தியபோதும் கலகம் அடக்கும் பொலிஸார் அவர்களை திருப்பி அனுப்பினர்.

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் யெமன் மற்றும் சிரியாவிலும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவளித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எகிப்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு, அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது ‘துரதிருஷ்டவசமானது’ என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதி முயற்சியில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது. 

4 comments:

  1. இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய கவுன்சிலின்  கூட்டம் இஸ்லாமிய கிலாபத்தை மீண்டும் ஆரம்பித்து இஸ்லாமியப் படையொன்றின் உருவாக்கத்தோடு நலவே முடியட்டும்.

    ReplyDelete
  2. இஸ்லாமிய கவுன்ஸில் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திலை ஆனால் கூடி வெறும்
    கண்டனத்தை மாத்திரம் ொண்டதாக இன்றி America வுக்கு எதிராக பல காத்திரமான நடவடிகைகள் எடுக்கப்படவேண்டும் என்பது சகல முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.


    ReplyDelete
  3. Zionist will plan another terrorist attack and use the media to divert this news. Let's wait and see.

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
      (அல்குர்ஆன் : 4:108)

      Delete

Powered by Blogger.