Header Ads



பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ரோஹிஞ்யாக்களுக்கு எதிரான தாக்குதலை, இன அழிப்பாக அறிவித்த அமெரிக்கா


மியன்மார் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிஞ்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

வங்காளதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து மியன்மாரில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகையைக் கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்குப் பயந்து ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

பொலிஸ் சோதனைச் சாவடிகளின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ரோஹிஞ்யா போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான இராணுவ வேட்டை தீவிரமடைந்தது.

மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 இலட்சம் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

முன்னதாக, மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது இராணுவம் நடத்தி வரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு மியன்மார் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்யா மக்களைத் திரும்பப்பெற மியன்மார் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், மியன்மார் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.