Header Ads



மாகாண சபை தொகுதி எல்லை, நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ்

புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கை மாவட்டம் தோறும் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோர் இன்று புதன்கிழமை தமது கட்சி சார்பில் மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி இந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அமர்வு ஆணைக்குழுவின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது விடயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்ததாவது;

"1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரமே உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது முப்பது வருடம் கடந்துள்ள நிலையில் எமது நாட்டின் சனத்தொகையானது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மாகாண சபைகள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் ஒவ்வொரு நாற்பதாயிரம் சனத்தொகைக்கு ஒரு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் காலத்திற்கு காலம் சனத்தொகை அதிகரிப்புக்கேற்ப உறுப்பினர்களை அதிகரிப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட முடியும் என்ற சரத்தின் பிரகாரம் 2004 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாகாண சபைக்குமான உறுப்பினர் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி ஒன்று தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த வர்த்தமானி அப்போதைய ஜனாதிபதியினால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அத்தடை நீக்கப்படுமாயின் தேர்தல்கள் ஆணையாளரினால் தற்போதைய சனத்தொகைக்கேற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியும். 

அதேவேளை மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கு தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமாயின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

மாகாண சபைகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு செய்யப்படுமாயின் சிறுபான்மையினருக்கான தொகுதிகள் உருவாக்கப்படுவதுடன் விகிதாசார ரீதியிலும் அங்கத்துவம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.  

அதனால்தான் எமது கட்சி, மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் மேற்படி யோசனையை முன்வைத்து, வலியுறுத்தியுள்ளது.

எமது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வருமாயின் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் என நம்புகின்றோம்." என்று செயலாளர் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

1 comment:

  1. Dear admin please change muslim congress symbol into elephant don't publish as a tree symbol

    ReplyDelete

Powered by Blogger.