December 31, 2017

அலீ ரளியல்லாஹு அன்ஹு, அவர்களின் சொற்பொழிவு

-நூருத்தீன்-       

குலபாஉர் ராஷிதீன்களின் வரிசையில் நான்காவது கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அலீ ரலியல்லாஹு அன்ஹு வீரத்தின் சிகரம். போலவே அவரது ஞானமும் பிரசித்தம். மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் பற்பல. ஆழமான கருத்துகளுக்கும் சிந்தையை உலுக்கி இறையச்சத்தைத் தூண்டும் உபதேசத்திற்கும் அவற்றில் குறையே இருந்ததில்லை. வரலாறு அவற்றைப் பத்திரமாகப் பதிந்து வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இது.

“இவ்வுலகம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது; விரைவில் அது விடைபெறப்போகிறது. மறுமை வந்துகொண்டிருக்கிறது; அது விரைவில் துவங்கப்போகிறது.

புரவிகளெல்லாம் இன்று தயார்படுத்தப்படுகின்றன; நாளை போட்டி துவங்கப்போகிறது. நிச்சயமாக, நம்பிக்கை அளிக்கும் நாள்களில் நீங்கள் வாழ்கிறீர்கள்; அவை மரணத்தால் தடைபடப்போகின்றன.

தம் மரணம் வருவதற்கு முன் இந்த நம்பிக்கை அளிக்கும் நாள்களில் யாரெல்லாம் குறையுடையவராகிறாரோ அவருக்கெல்லாம் அழிவே. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி கடுமையாக உழைப்பதைப்போல் அவனது வெகுமதியில் நம்பிக்கைக்கொண்டு கடுமையாக உழையுங்கள்.

சொர்க்கத்தைப் போன்ற ஏதொன்றையும் நான் அறிந்ததில்லை - அதை நாடுபவர்கள் உறங்குவதற்கு; நரகத்தைப் போல் ஏதொன்றையும் நான் அறிந்ததில்லை - அதை அஞ்சுபவர்கள் உறங்குவதற்கு. சத்தியத்தால் பயன் பெறாதவன் பொய்மையால் தீங்கிழைக்கப்படுவான்.

நேர்வழியைப் பின்பற்றி பலனடையாதவனை தீயவழி சீரழிவுக்கு இட்டுச்செல்லும். நீங்கள் பயணம் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளீர்கள்; அதற்கான முன்னேற்பாடுகள் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மக்களே! இவ்வுலகம் தற்காலிகமான தங்குமிடம்; நேர்மையாளர்களும் ஒழுக்கக்கேடானவர்களும் அதன் சொகுசை ஒன்றே போல் அனுபவிக்கலாம். ஆனால் மறுமை நிச்சயமானது, அது மகா சக்தி வாய்ந்த அரசனால் ஆளப்படுவது.

ஷைத்தான் உங்களுக்கு வறுமையெனும் அச்சத்தை ஊட்டி தீமை புரிய ஊக்குவிப்பான். ஆனால் அல்லாஹ் தனது மன்னிப்பையும் வெகுமதியையும் வாக்குறுதி அளிக்கிறான். அவன் அனைவரின்மீதும் அக்கறையுள்ளவன், அனைத்தும் அறிந்தவன்.

மக்களே! உங்களுடைய வாழ்நாளில் அறச்செயல் புரியுங்கள், உங்களுடைய வழித்தோன்றல்கள் பொறுப்பேற்கப்படுவார்கள். அல்லாஹ் தனக்கு அடிபணிபவனுக்குச் சொர்க்கத்தை வாக்குறுதி அளித்துள்ளான். தன்னை அடிபணிய மறுப்பவருக்கு நரகம் என்று எச்சரித்துள்ளான்.

நரகின் நெருப்பு அணையாது. அதன் கைதிகளுக்குப் பிணை கிடையாது. அதில் துன்புறுபவருக்கு எவ்வித உதவியும் அளிக்கப்பட மாட்டாது. அதன் வெப்பம் தீவிரமானது. அதன் அடிப்புறம் ஆழமானது. அதன் நீர் கொதிக்கும் துர்நாற்றத் திரவம்.”

மக்களுக்கு இறையச்சத்தை ஊட்டுவதும் அவர்களது கவனத்தையும் இலட்சியத்தையும் மறுமைக்குத் திசை திருப்புவதும் அடிப்படையாக இருந்தாலும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியுள்ள பாங்கு கவனத்திற்குரியது. ஒரு விஷயத்தை எதிரெதிர் அர்த்தம் கொண்ட விஷயங்களால் விவரிக்கும்போது கேட்பவர் கவனத்தை அது அப்பட்டமாய்க் கவரும். அந்த யுக்தி இந்த உரை முழுவதும் இழையோடுவதைக் காணலாம்.

தற்காலிகமான இவ்வுலகில் கிடைக்கப்பெறும் சொகுசுகளும் ஆடம்பரமும் இறை நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒன்றேபோல் கிடைக்கலாம். ஏன் பல விஷயங்களில் மறுப்பாளர்களுக்கு அது ஏராளமாகவும் அருளப்பெற்றிருக்கலாம். ஆனால், மறுமையில்தான் அவரவருக்கு உரிய வெகுமதி எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றிக் கிடைக்கும் என்பதை அழுத்தமாகத் தெரிவிக்கிறார் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

படிப்பினைகள் நிறைந்துள்ள சொற்பொழிவு இது.

- நூருத்தீன்

வெளியீடு: அல்ஹஸனாத் டிசம்பர் 2017

1 கருத்துரைகள்:

MASHA ALLAH; GREAT ADVICES FOR EVERYONE.

Post a Comment