Header Ads



ஜெருசலம் விவகாரம் – முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் கண்டனம்

புனித ஜெருசலம் நகரை அதனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் தலைநகராகப் பிரகடனப் படுத்தி டெல் அவிவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்றுவது பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள ஆணையை முஸ்லிம் முற்போக்கு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இது சம்பந்தமாக அதன் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஜெருசலம் என்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு புனித நகரம். அது அனைத்து மதங்களாலும் புனிதமாக போற்றிக் கொண்டாடப் படுகிறது. பலஸ்தீனம் ஆக்கிரமிக்கப் பட்டதில் இருந்து புனித ஜெருசலம் நகரின் தனித்தன்மையை பாதுகாப்பது பற்றிய பல்வேறு தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபை கூட மேற்கொண்டது. அனைத்து சர்வதேச சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறி சியோனிஸ விருப்பு வெறுப்புக்காக செயற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பல கோடி முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் சமய உரிமைகளையும் உணர்வுகளையும் அப்பட்டமாக அவமானப் படுத்தியுள்ளார்.

ஜெருசலம் சமாதானத்தின் நகரம். உலக அமைதி ஆரம்பிக்கும் இடத்திலேயே அதனை குழி தோண்டிப் புதைப்பதற்கான ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி சமாதான விரும்பிகள் அனைவராலும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

ஜெருசலம் சுதந்திர பாலஸ்தீனின் தலை நகரமாகும். ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு சுதந்திரமாக மஸ்ஜிதுல் அக்ஸாவைத் தரிசிப்பதற்கான விடுதலை கிடைக்கும் வரையான போராட்டத்துக்கு நாம் எப்போதும் ஆதரவாக உள்ளோம். பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாம் குரல் கொடுப்போம்.

அப்துல் சத்தார்
தேசிய அமைப்பாளர்
முஸ்லிம் முற்போக்கு முன்னணி 

No comments

Powered by Blogger.