December 03, 2017

வெள்ளை மாளிகையிலேயே, இவ்வளவு பிரச்சினைகளா..?


வீட்டில் எலி, கரப்பான் பூச்சி இருந்தால் முதல் வேலையாக அவற்றை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். காரணம் எலியால் நோய் உட்பட பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். வீடுகளில் அது தரும் தொல்லையை சகிக்க முடியாது. சிறிய வீடுகளில் எலி மற்றும் பூச்சிகளால் பிரச்னை ஏற்பட்டால் எளிதில் அதனை ஒழித்துவிடலாம். ஆனால் பிரம்மாண்டமான வெள்ளை மாளிகையின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டு அட்டகாசம் செய்யும் இந்தச் சிறிய ஜீவன்களை எப்படி அழிப்பது என்ற கவலையில் இருக்கின்றனர் அதன் ஊழியர்கள். 

அமெரிக்கா அதிபர்களின் வசிப்பிடமாகவும், அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையகமாகவும் உள்ளது வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகையை வடிவமைத்தவர் அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர் ஜேம்ஸ் ஹோவன் என்பவர்.  வெள்ளை மாளிகைக்கு White House என்று பெயர் சூட்டியவர் அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் பதவிக் காலத்தில் 1792-ம் ஆண்டு, அமெரிக்க அதிபர்கள் வசிப்பதற்கு தனிப்பட்ட ஒரு மாளிகை நிர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜார்ஜ் வாஷிங்டன் இம்மாளிகையில் வசிக்கவில்லை. காரணம் இம்மாளிகையின் கட்டிடப் பணிகள் நிறைவடையும் முன்பே, 1799-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். வெள்ளை மாளிகைப் பணிகள் 1800-ம் ஆண்டில்தான் நிறைவடைந்தது. அதன்பின் அங்கு முதன்முதலில் வசித்தவர் ஜான் அடம்ஸ். இவர் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி.

தற்போது வெள்ளை மாளிகை நிர்மாணித்து 225 ஆண்டுகளாகிவிட்டது. இம்மாளிகையினைப் பார்வையிட பொதுமக்களுக்கு 1805-ம் ஆண்டு முதல் அனுமதி இருந்தது. ஆனால் 9/11 தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையினைப் பார்வையிட கட்டுப்பாடுகள் அதிகரித்துவிட்டது. வெள்ளை மாளிகையினைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வருகை தருகின்றனராம்.

55000 சதுர அடி பரப்பளவில், 132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை கொண்டுள்ளது. இதில் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடி படிக்கட்டுகள், 3 லிஃப்டுகள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை குடியிருப்பில் சமீபகாலமாக எலிகள், எறும்புகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் அதிபரின் நிர்வாக இடம், கப்பல்படையின் உணவகம், விருந்தினரை வரவேற்கும் அறை உள்ளிட்டப் பகுதிகளில் எலிகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது.

டிரம்பின் முக்கிய நிர்வாக அறையில் 4 இடங்களில் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மூத்த அதிகாரிகளின் அறைகளில் எறும்பு, மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை முழுவதும் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில பிரச்னைகள் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இருந்தே தொடர்கின்றனவாம்.

அமெரிக்க பொது சேவை நிர்வாகம் தரப்பில் வெள்ளை மாளிகையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உடனடியாக சீர் செய்து தருவதாக உத்திரவாதம் அளித்துள்ளது. இரண்டாம் மாடியில் உள்ள டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் கிழக்கு அலுவலகத்தில் திரைச் சீலைகளை மாற்றும் பணி உத்தரவுகள் உள்ளிட்ட வெள்ளை மாளிகையிலிருந்து நூற்றுக்கணக்கண பராமரிப்பு வேலை உத்தரவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளை மாளிகையின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமெரிக்காவின் ஜெனரல் சர்வீஸ் நிர்வாக அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் பிரையன் மில்லர் கூறுகையில் அவை மிகப் பழமை வாய்ந்த கட்டிடங்கள். பழைய மாளிகையைச் சீர் அமைப்பது எத்தகைய சிரமமான பணி என்று கூறினார்.

சதுர அடிக்கு 2.13 டாலர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் ஒரு லட்சம் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் இம்மாளிகையின் சீரமைப்புப் பணிக்காக செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment