November 25, 2017

முஸ்லிம் - சிங்கள இடைவெளி குறைந்தால், பிரச்சினையும் குறையும்..!

இலங்கையின் ஒரு மூலையிலும், கடைத் தெருவின் நடுவிலும் நாளை என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிற என் அன்புச் சகோதரனுக்கு, கிழக்கிலிருந்து சில வரிகள்..

மிகக் குறைந்த எண்ணிக்கையான சிங்களத் தீவிரவாதிகள் (எம்மையும் தீவிரவாதிகள் என அழைத்தவர்களாக) எமக்கெதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். சிறிய தொகையாக அவர்கள் இருக்கின்றபோதும் தொடர்ச்சியான அவர்களது நச்சுப் பிரச்சாரம் சிங்கள சகோதரர்களுக்கும் எமக்குமிடையில் விரிசல்களை உண்டு பண்ணக் கூடிய சாத்தியப்பாடும் இருக்கிறது.

ஆட்சியாளர்களும் எம்மை பாதுகாக்கக் கூடிய மனோநிலையில் உள்ளவர்களாகத் தெரியவில்லை. எம்மைப் பற்றிய தப்பபிப்பிராயங்களும் அவர்களிடம் வேரூண்டியுள்ளன. எம்மைப் பலிக்கடாக்களாக்கி சிலவற்றை  சாதிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதையும்  ஓரளவு விளங்கிக் கொள்ள முடிகிறது. முஸ்லிம்களுக்கெதிரான சர்வதேச சக்திகளின் சதிவலை இலங்கையிலும்  விரிக்கப்பட்டிருக்கிறது  என்பதை அனுமானிக்க முடிகிறது. 

மொத்தத்தில் எமக்கெதிரான அநியாயங்களும் அடக்குமுறைகளும் இன்னுமின்னும் கூடியே செல்லவிருக்கின்றன. 

இச்சூழலில், பயங்கரவாதத் தாக்குதல்களில் முப்பது வருடத்திற்கும் மேலாக நசுக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம் பிரதேசமொன்றில் வாழ்ந்த அனுபவம் சிலவேளை இப்போது பிரயோசனப் படலாம் என்பதற்காக இப்பதிவை செய்ய விளைகிறேன். பின்வருவன நாங்கள் நாம் கவனம் கொள்ளவேண்டிய சில விடயங்கள்..

1. நம்மைச் சூழவுள்ள எல்லா சிங்களவர்களுமே எமக்கு எதிரிகளாக இருக்க முடியாது.  அடையாளப் படுத்தக் கூடிய, தனிப்பட்ட ரீதியிலாயினும்  உங்களோடு தொடர்பில் உள்ள  சிங்கள சகோதரர்களோடு உங்களுக்கிருக்கின்ற உறவை இன்னும் கூட்டிக் கொள்ளுங்கள். ஆபத்து வரவிருக்கிறது என்பதை எமக்கு அறிவிக்கக் கூடிய மனோநிலயையாவது அவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்க முடியும். 

2. பக்கத்தில் குடியிருக்கின்ற, தொழில் புரிகின்ற அல்லது தொழில் நடாத்துகின்ற சிங்கள சகோதரரோடு எமக்கிருக்கின்ற ஆபத்துக்கள் பற்றி பேச முடியுமா என்று சிறு முயற்சி செய்து பாருங்கள். சாத்தியம் தென்பட்டால் அதை எவ்வாறு விரிவு படுத்தி சிறிய கூட்டங்களை ஏற்படுத்தி எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வையும் எமக்கு உதவக் கூடிய மனோபாவத்தையும் அவர்களிடம் வளர்க்க முடியும் என முயற்சி செய்யலாம். 

3. இயற்கை அனர்த்தம் போன்ற ஆபத்து காலங்களின்போது நிறைய உதவிகளை நாம் செய்திருப்போம். அவ்வேளைகளில் எங்களோடு ஒத்தாசை புரிந்த சிங்கள சகோதரர்கள் நிறையவே இருப்பார்கள். அவர்களை தேடிப்பிடித்து அவர்களிடம்  எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறி, ஆபத்து வேளைகளில் எமக்கு சார்பாக குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும், எமக்கு உதவக் கூடியவர்களாகவும் அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். 

4. மிக முக்கியமாக இரவு வேளைகளில் எமது வியாபாரத் தலங்களையும் வீடுகளையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. யுத்த காலங்களில் கிழக்கில் நாங்கள் விழிப்புக் குழுக்களை உருவாக்கியிருந்தோம். ஊர் மக்கள் அல்லது குறித்த பிரதேசத்திலுள்ளவர்கள் ஓன்று சேர்ந்து இரவிரவாக சுழற்சி முறையில் காவல்  காப்போம். கூட்டம் கூட்டமாக நாம் இவ்விளிப்புக் குழுக்களை உருவாக்க முடியும். ஆனால் அவ்விளிப்புக் குழுக்களே பிரச்சினையாக உருமாறாதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிவாயல் நிர்வாகங்கள், ஊர்த்தலைவர்கள் போன்றோர் இக்குழுக்களை வழிக்காட்டி மேற்பார்வை செய்யவும் முடியும். 

5. தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய எமக்கெதிரான அநியாயங்கள் எமது இளைஞர்களை வன்முறையை கையிலெடுக்கக் கூடியவர்களாக மாற்றும். இவ்விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எழுகின்ற வன்முறை மனோபாவத்தை மாற்றி கல்வி எழுச்சி போன்ற விடயங்களில் அவர்களது கவனத்தை திருப்பக்  கூடியவாறு இளைஞர்களை நாம் வழிகாட்ட முடியுமாக இருந்தால் எதிர்காலம் சிறப்புறும். இவ்வகையான வழிகாட்டல்களையே நாம் கிழக்கில் யுத்த காலங்களில் மேற்கொண்டோம். கிழக்கு முஸ்லிம்கள் கல்வியில் இப்போது சிறந்து விளங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். 

6. எது எப்படியிருப்பினும் எம்மைக் காவல் காக்கக் கூடியவர்கள் இந்நாட்டின் இராணுவமும் பொலிசாருமே! அவர்களோடு உறவொன்றைப் பேணிக்கொள்வது எப்போதும் முக்கியமானது!

7. அரசியல்வாதிகளை குற்றம் சுமத்திக் கொண்டு இருக்காது சமூகத் தலைவர்கள் (ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் போன்றோர்) ஒன்று சேர்ந்து சமூகக் கட்டமைப்புக்களை (குழுக்களை) உருவாக்கி பிரச்சனைகளை அணுக பழகிக் கொள்ளவேண்டும். இவ்வாறுதான் பள்ளிவாயல்கள் நிறுவனங்கள் சம்மேளனங்கள் போன்ற இப்போதிருக்கின்ற கட்டமைப்புக்கள் தோற்றம் பெற்றன. 

கிழக்கிலங்கையில் நாங்கள் பழக்கப்பட்டுப் போன ஒரு வாழ்வியல் அனுபவங்களை  உங்களோடு பகிர்ந்து கொள்ளவே நான்  எத்தனித்தேன். இப்பதிவு சொல்கின்ற செய்தியை இயன்றளவு மற்றைய சகோதரர்களுக்கும் கிட்டச் செய்யுங்கள் – பிரயோசனமானவை என்று கருதினால்!

எம்மை எதிர்நோக்கக் கூடிய அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ளக் கூடிய வல்லமைகளை எல்லாம் வல்ல இறைவன் எமக்குத் தருவானாக.

- எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர், காத்தான்குடி.

0 கருத்துரைகள்:

Post a Comment