Header Ads



அடுத்த அசம்பாவிதம் எங்கு..? தடுப்பது யார்..??

-முஹிடீன்-

நல்லாட்சி அரசாங்கத்திடம் தூரநோக்குடனான போதுமான திட்டமிடல்கள் இல்லையென்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாகவே நாட்டிலுள்ள எதிர்க் கட்சியினரால் மாத்திரமன்றி புத்திஜீவிகளாலும் முன்வைக்கப்படுகின்றன. பிரச்சினைகள் எழும்போது உடனடித் தீர்மானங்களை முன்வைத்து தீர்வு காண முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. புற்று நோயுள்ளவரின் உடம்பிலுள்ள சிறு காயத்துக்கு கட்டுப் போடுவதை ஒத்த நடவடிக்கையிலேயே தொடர்ந்தும் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட சமூகங்களுக்கிடையிலான இனப்பிரச்சினைக்கும் இவ்வாறே தீர்ப்புச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான பொதுவான ஒரு குற்றச்சாட்டாகும். இந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பொதுபல சோனாவினால் முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளும், அண்மையில், கிந்தொட்ட பகுதியில் அடர்ந்தேறிய இனவாத நடவடிக்கைகளும் கூட அரசாங்கத்தின் கண்ணுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக தென்படவில்லையென்பது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களினதும் உள ஆதங்கங்களாகும்.

முஸ்லிம் சமூகமும் இந்நாட்டில் பிரச்சினைக்குரியவர்களாக மாறியதன் பின்னர்தான் முஸ்லிம் சமூகத்தின் மீது அரசாங்கத்தின் பார்வை படுமா? எனவும் ஆதங்கப்படாத உள்ளங்கள் இல்லாமல் இல்லை.

கிந்தொட்ட பிரச்சினையை ஒரு திருப்பு முனையாக வைத்தாவது நாட்டிலுள்ள பல் சமூகங்களுடன் கலந்துள்ள முஸ்லிம்கள் சகோதர சமூகத்துடன் இணைந்து பாதுகாப்பு தொடர்பில் புதிதாக தீர்வுத் திட்டமொன்றைப் பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும். நாட்டிலுள்ள வெகுஜன ஊடகங்களும் முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது மௌன விரதத்தை கடைபிடிக்கின்றன. அரசாங்கமும் அழிவுகளின் பின்னரேயே தீர்வுகளை யோசிக்கும் நிலையில் உள்ளது. பாதுகாப்புப் பிரிவினரும் நடுநிலை வகிக்கத் தவறியது என்பது பொலிஸ் உயர் அதிகாரிகள் மனச் சாட்சியைத் தொட்டுச் சொன்ன உண்மைகளாகும்.

அரசாங்கம் இன்னும் 1990 காலப்பகுதிகளில் இருந்த மக்களை வைத்தே தீர்மானங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என சமூக வலைத்தள நிபுணர்களுள் ஒருவரான சங்ஜன ஹத்தொடுவ தெரிவித்துள்ளார்.

கிந்தொட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துக் கூறுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கம சம்பவத்தை நோக்கினால், அது தொடர்பான பிரச்சாரம் முழுமையாக வெளியானது சமூக வலைத்தளங்களில் ஆகும் என்பது தெட்டத் தெளிவான ஒன்று. 2017 ஆகும் போது இந்த நிலைமை மாறியுள்ளது. மக்கள் இன்று பிரச்சினைகள் எழும்போது அதனை சமூக வலைத்தளங்கள் ஊடகாவே வெளிப்படுத்தப் பார்க்கின்றனர். முக்கிய நிகழ்வுகள் முதலில் வெளிப்படுவது சமூக வலைத்தளங்களிலேயே ஆகும் என்பதை மறுக்க முடியாது.

அத்துடன், இவ்வாறான செய்திகள் ஊடக தர்மங்களைப் பேணியதாக சமூக வலைத்தள ஊடகங்களில் வெளிவருவதில்லை. தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே இந்த செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதன்போது உண்மைத் தன்மை பற்றிய பிரச்சினை எழுவது நியாயமானது.
அரசியல் நிலைமைகள் கடந்த 2014 இல் இருந்ததை விடவும் மாறிய போதிலும் அன்று போன்று பெரும்பாலானவர்கள் இன்றும் முகநூல்களிலேயே கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். கலாநிதிகள், பேராசிரியர்கள், சமூகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த கிந்தொட்ட சம்பவத்தை வைத்து, சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் அனைவரும் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என அரசாங்கம் நிபந்தனையிடுமாக இருந்தால் அது தவறானது. இது மிருகக்காட்சிசாலையிலுள்ள மிருகங்கள் அனைத்தும் ஒரே வகையான உணவைச் சாப்பிட நிர்ப்பந்திப்பதைப் போன்றதாகும் எனவும் சங்ஜன ஹத்தொடுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு விளக்கம் இல்லாத நிலையிலேயே உள்ளது. இதனால்தான், சமூக ஊடகங்களுக்கு தடை போடுவது பற்றி அரசாங்கம் கதைத்து வருகின்றது. சமூக ஊடகங்கள் சில பொய்யைப் பரப்புவதாயின், அரசாங்கமும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி உண்மை நிலைவரத்தை எடுத்து வைக்க வேண்டும். இருப்பினும், அவ்வாறான ஒரு நிலைமை பற்றி அரசாங்கம் யோசிப்பதில்லை.

சமூக ஊடகங்கள் தொடர்பில் நீண்ட கால வேலைத்திட்டமொன்று அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும். சமூக ஊடகங்களைத் தடை செய்ய முற்படும் போது பிரச்சினைகள் உச்சத்தைத் தொடுகின்றன. இதனால், சமூக ஊடகத் தவறுகளை சமூக ஊடகங்களின் ஊடாகவே திருத்த முனைய வேண்டும். அரசாங்கம் இன்னும் 90 களில் உள்ளதை வைத்துத்தான் சிந்திக்கின்றது.

ஆனால், மக்களோ 2017 ஆம் ஆண்டில் உள்ளனர். பிரச்சினை இங்கேதான் இருக்கின்றது எனவும் சமூக வலைத்தள நிபுணர் சங்ஜன ஹத்தொடுவ வலைத்தள செய்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ்வாறு விளக்கியுள்ளார்.

கடந்த அரசாங்கம் சமூகங்களுக்கிடையிலான இனப்பிரச்சினையை அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. இருப்பினும், இந்த அரசாங்கமும் அதே தவறை இழைத்து வருகின்றது என தற்பொழுது ஆதாரங்களுடன் கோடிட்டுக் காட்டப்படுகின்றது.

இனப்பிரச்சினை அரசியல் தந்திரமாக மாறியுள்ளது என கிந்தொட்ட பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ரமங்ஞா பிரிவின் நீதிமன்றப் பதிவாளர் பேராசிரியர் அத்தன்கனே ரதனபால தேரர் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினையினால் நாம் அதிகமாகவே வேதனை அனுபவித்துள்ளோம். நீண்ட காலம் யுத்தமொன்றுக்கு முகம்கொடுத்துள்ளவர்கள் என்ற அனுபவத்தை வைத்து, இதன்பிறகு இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படாதிருக்க சிந்திப்பதே புத்திசாலித்தனமாகும்.

இருப்பினும், தற்பொழுது இடம்பெறும் நிகழ்வுகள் எமக்கு கவலையளிக்கின்றது. மனிதர்களின் பொதுவான மனிதத் தன்மையை அறியாத நிலையில், மனிதர்களை பல்வேறு இனப்பிரிவுகளாக விளித்துப் பேசுவது, இன்று அரசியல் உத்தியாக மாறியுள்ளது. இதற்கு தேவையான அளவு உதாரணங்கள் உள்ளன.

ஊடகங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் இடம்பெறும் நிகழ்வுகள் உசுப்பிவிடப்படுகின்றது என்ற ஒரு கருத்து நாட்டில் உருவாகியுள்ளது. தனிப்பட்ட இருவருக்கிடையில் நடைபெறும் ஒரு நிகழ்வையும் கூட இனச்சாயம் இட்டுப் பார்க்கும் அபாயகரமான ஒரு நிலைமை ஊறிப் போயுள்ளது. ஊடகங்கள் இந்த விடயத்தில் விளிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. பொது அமைப்புக்களுக்கு மக்கள் மீதுள்ள பொறுப்புக்களைப் போலவே, ஊடகங்களுக்கும் மக்கள் மீது பொறுப்புக்கள் உள்ளதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நாட்டில் மாவனல்லை முதல் தற்பொழுது கிந்தொட்டை வரையில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளின் போது முஸ்லிம் சமூகம் இழந்தவைகள் அதிகம். இச்சம்பவங்கள் இடம்பெற்றவுடன் முஸ்லிம் சமூகத்திலுள்ள ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கொதித்து எழுந்து தீர்வுகள் பற்றி ஆலோசனை செய்து திட்டம் தீட்டுகின்றனர். பின்னர் ஓரிரு மாதங்களில் அவை வெறும் காணல் நீராக மாறிவிடுகின்றது.

இதுவே, எமது சமூகத்தின் மீது அடர்ந்தேறும் அத்துமீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இனிமேலும், இந்த சமூகம் பாடம் படிக்க வில்லையானால், எதிர்வரும் காலத்திலும் பாரிய இழப்புக்களை சுமக்கத் தயாராக வேண்டும் என்பதே சமூகக் கவலையுள்ள பலரதும் கருத்தாகும்.

இனியும் தாமதிக்காமல் சமூகத்தின் பாதுகாப்புக்கு நீண்டகால திட்டங்கள் குறித்து தேசிய ரீதியில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பிரச்சினை வரும்போது பேசப் போவதனால், பிரயோசனமில்லை. பிரச்சினை வருமுன் எவ்வாறு அணைகட்டுவது என்பதுவே முக்கியமானது.

இயற்கை அனர்த்தத்தை எதிர்பார்த்து பாதுகாப்பு வேலிகளை போடுவதும், ஒத்திகை பார்ப்பதும் தேசிய வேலைத்திட்டமாக இருக்கின்றது. பல்லினம் வாழும் ஒரு நாட்டில் உடனடியாக எங்கும் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்க சாத்தியப்பாடுள்ள இனக் கலவரங்களை தடுக்கவும் அதனை வராமல் பாதுகாப்பதற்கும் என்ன தேசிய வேலைத்திட்டம் இருக்கின்றது என கேள்விகள் எழுவது நியாயமானது.

கிந்தொட்ட பிரதேசத்தில் கலவரம் ஒன்று ஏற்பட்டது என்பதற்கு சமூகத்தில் இயங்குகின்ற சிங்கள-முஸ்லிம்  அமைப்புக்கள் அனைத்தும் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும், அவ்வாறான அமைப்புக்கள் சகலவற்றினதும் தோல்வியையே இக்கலவரம் புகட்டும் பாடமாகவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்த உள்ளம் திறந்து கூறியிருந்த கருத்துக்கள் எமது சமூகத்தின் சிந்தனையைத் தட்ட வேண்டும் என்பதுவே எல்லோரினதும் பேரவாவாகும்.

3 comments:

  1. We escaped from tiger and trapped to lion.

    ReplyDelete
  2. ஞானசார தேரர் சொல்வதைப்போன்று ஜனாதிபதி/பிரதமர் இரண்டுபேருமே ஆளுமையற்றவர்களன்பதை நிரூபிக்கிறார்கள். இவர்களின் பின்னல் போய் ஏமாந்துதான் மிச்சம்

    ReplyDelete

Powered by Blogger.