Header Ads



சிறு சம்பவம், வன்முறையாக மாறி முஸ்லிம்கள் மீதான கலவரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

போர் முடிவடைந்து 8 ஆண்டுகளின் பின்னரும் அதிலும் தற்போதைய கூட்டு அரசு பதவியேற்று இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படவில்லை, அந்த விடயத்தில் கொழும்பு அரசுகள் வெற்றி பெறவேயில்லை என்பதை காலி, கிந்தோட்டை வன்முறைகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

இனங்களுக்கு இடையிலான அமைதி, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் என்பன இன்னும் அடிமட்ட நிலையிலேயே உள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது.

நல்லிணக்கம், நல்லிணக்கம் என்று அரசியல் தலைவர்கள் வார்த்தைக்கு வார்த்தை பேசினாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் தோற்றிருக்கிறார்கள்.

எப்போதும் தீப்பற்றி வெடிக்கக் கூடிய நிலையிலேயே இனங்களுக்கு இடையிலான உறவு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

கிந்தோட்டையில் ஒரு சிறு விபத்துச் சம்பவம் வன்முறையாக மாறி முஸ்லிம் மக்கள் மீதான கலவரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய நேரத்தில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன, உடைத்துச் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன, எரித்துச் சாம்பராக்கப்பட்டிருக்கின்றன.

இது ஒரு தனிப்பட்ட பகைமையின் விரிவு என்று நிச்சயம் புறமொதுக்கி விட முடியாதது. சொற்ப நேரத்திற்குள் பலர் அணிதிரண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னரான திட்டமிடலும் காத்திருப்பும் அவர்களிடம் இருந்திருக்கிறது என்பது மிகத் தெளிவு.

போருக்குப் பின்னரான காலத்தில் சிங்களவர்களால் முஸ்லிம்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையில் கிந்தோட்டைச் சம்பவம் ஒரு காத்திருப்பின் பின்னரான தாக்குதல் எனக் கொள்வதில் தவறில்லை.

இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்கான சூத்திரதாரிகள் மீதும் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இனவாதிகளுக்கு ஓர் தெளிவான சமிக்ஞையை அரசு வழங்கியிருந்தால் இன்றைய வன்முறைகளைத் தவிர்த்திருக்க முடியும்.

ஆனால், மாற்றங்களையும் நல்லிணக்கத்தையும் ஓர் இரவில் ஏற்படுத்தி விட முடியாது என்று வருடக்கணக்கில் சாக்குப்போக்குகளை அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இலங்கையில் அவர்களால் உண்மையான நல்லிணக்கத்தையோ நிரந்தரமான அமைதியையோ ஏற்படுத்தி விட முடியாது.

இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தி, அதிகாரங்கள் அனைத்து இனங்களுக்கும் பகிரப் படும்போது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீர்வை அரசால் காண முடியும்.

ஆனால், புதிய அரசமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கே பௌத்தம் தான் இந்த நாட்டின் முன்னுரிமைக்குரிய மதம் என்று சிங்கள அரசியல் தலைவர்களும் சேர்ந்து நின்று வாதாடும் போது மற்றைய மதத்தவர்களை விட பௌத்த சிங்களவர்களே மேலானவர்கள் என்கிற மனோநிலையையும் அதன்வழியே மற்றைய இனத்தவர் மீதும் மதத்தவர் மீதும் வெறுப்புணர்வு வளர்வதும் தடுக்கப்பட முடியாதது.

சிங்கள அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களின் இந்த மனோபாவத்திற்கு மீண்டும் மீண்டும் தீனி போட்டு வாக்கு வேட்டையாடக் காத்துக் கொண்டிருக்கும் வரையில் இது போன்ற இனங்களுக்கு எதிரான வன்முறைகளை, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சொல்லியிருப்பதைப் போன்று “அருவருக்கத்தக்க செயல்களை” தவிர்க்கவே முடியாது.

மாற்றம் என்ற கோசத்தோடும், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கம் என்கிற முழக்கங்களோடும் பதவிக்கு வந்த மைத்திரி ரணில் கூட்டு அரசே கிந்தோட்டை வன்முறைகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீதும் அவர்களைத் தூண்டிவிட்டுப் பின்னணியில் இருந்தவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.

அத்தோடு வன்முறைகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கு விரைந்து நேர்மையான தீர்வைக் காண வேண்டும். அதன் மூலமே இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.

No comments

Powered by Blogger.