Header Ads



பாகிஸ்தானியர்களின் மனங்களை வென்ற, இலங்கை கிரிக்கெட் அணி


இலங்கை கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானில் கற்கைநெறிகளை மேற்கொள்வது பாகிஸ்தானிற்கு பெருமையளிக்கக்கூடிய விடயமாகும். இலங்கை கிரிக்கெட் அணியினை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைத்தமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கும்  மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக  பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி ஷேஹ்சாத் இக்பால் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் கப்பலுக்கான வரவேற்று நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது வரவேற்பு உரையாற்றுகையிலேயே குறித்த கப்பலின் தளபதியான  ஷேஹ்சாத் இக்பால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

“இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்  நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளன. அத்துடன் இருதரப்பு கடற்படைகள் பன்முக ஒத்துழைப்புக்களில் ஈடுபட்டுவருகின்றன. 

இவ்விஜயமானது இருநாடுகளுக்குமிடையில் காணப்படுகின்ற பாதுகாப்பு மற்றும் கலாச்சார, பொருளாதார, வலுவான இராஜதந்திர உறவுகளுக்கான நிலையை எடுத்துகாட்டாவதுடன், அவற்றினை மேலும் வலுப்படுத்துவதினை இலக்காக கொண்டுள்ளது.”

மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பாகிஸ்தானிலே கற்கைநெறிகளை மேற்கொள்வதானது பாகிஸ்தானிற்கு பெருமையளிக்கக்கூடிய விடயமாகும். பாகிஸ்தான் மக்களின் மனங்களை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைத்த இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு இதன்பொழுது நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் எப்பொழுதும் இலங்கைக்கான ஆதரவினை எதிர்காலத்திலும் வழங்கும்” எனவும் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில், அமைச்சர் தயா கமகே பிரதம அதிதியாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, பாகிஸ்தானின் செயலாற்றும்  உயர்ஸ்தானிகர் டாக்டர். சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா மற்றும் உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் அதிகாரிகள், வெவ்வேறு துறைகளின் நபர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் இந்நிகழ்விலே கலந்துகொண்டர்.

இதையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கேக் அமைச்சர்கள், பாதுகாப்பு செயலர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி, பாகிஸ்தானிய செயலாற்றும்  உயர்ஸ்தானிகர் டாக்டர். சர்ப்ராஸ் அஹமத் கான் சிப்ரா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சஜ்ஜாத் அலி ஆகியோரால் இணைந்து வெட்டப்பட்டது.

இந்நான்கு நாள் விஜயத்தின்பொழுது பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் அதிகாரிகள் பல்வேறு நிபுணத்துவ மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.