Header Ads



ஈரானில் நிலநடுக்கத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதி


அளவுகோலில் 7.3 என்ற அளவில் பதிவான மோசமான நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களை கட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரான் அதிபர் ஹசன் ரூஹானி சூளுரைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ரூஹானி, இந்த நிலநடுக்கத்தில், அரசாங்க கட்டடங்கள்தான் இடிந்து விழுந்துள்ளன, தனியார் கட்டடங்கள் உறுதியாக நிற்கின்றன என்றார்.

நிலநடுக்கத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட சர்பொல் இ ஷகாப்பை பார்வையிட்ட அவர் இரண்டு கட்டடங்களை குறிப்பிட்டு இதனை கூறினார். ஒரு கட்டடம் இடிந்து இருந்தது. மற்றொரு கட்டடம் உறுதியாக நின்றது.

இரான் - இராக் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 540 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 8,000 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலநடுக்கத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட கெர்மன்ஷா மாகாண மக்களுக்கு உதவ முடியாமல் அரசாங்கம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாகாணாத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் வீடுகள் நிலநடுக்கத்தின் காரணமாக முற்றும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

இந்த பகுதிகளை பார்வையிட்ட இரானிய அதிபர் ஹசன் ரூஹானி , "மோசமாக சேதமடைந்த வீடுகளை அரசாங்கமே கட்டித்தரும்" என்றார்.

இந்த மாகாணத்தில் இரவில் வெப்பநிலை மோசமாக உள்ளது. உறையும் அளவுக்கு குளிரடிக்கிறது. இந்த குளிரில்தான் மக்கள் வசிப்பிடம் இல்லாமல் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகிறார்கள்.

வெப்பமூட்ட மக்கள் உடைந்த மரத்துண்டுகளை எரித்து குளிர்காய்ந்து வருகிறார்கள் என்று பிபிசி-யிடம் கூறினார் நாற்பத்தி இரண்டு வயதான அலி குலானி. இவர் இந்த மாகாணத்திலேயே மோசமான பாதிப்புக்கு உள்ளான காஸ்ரி ஷெரின் பகுதியைச் சேர்ந்தவர்.

அவர் சொல்கிறார், "நாங்கள் கூடாரங்களில் வசித்து வருகிறோம். எங்களுக்கு தேவையான தண்ணீரோ, உணவு பொருட்களோ இல்லை. அதிகமாக குளிருகிறது. குளிரில் மக்கள் அழுவதை உங்களால் கேட்க முடியும். வெப்பத்திற்காக, அந்த குழந்தைகள் வெப்பத்திற்காக அவர்களது பெற்றோர்களை அணைத்து நிற்கிறார்கள்."

அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில், இந்த பகுதியில் மட்டும் மோசமான அச்சமூட்டும் மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டன என்கிறார் குலானி.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, ஏறத்தாழ 200 நில அதிர்வுகள் அந்தப் பகுதியில் உணரப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே, இதுதான் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் மோசமான ஒன்றும் கூட.

இந்த மாகாணத்திற்கு உதவி பொருட்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. ஆனால், எந்த உதவி பொருட்களும் காஸ்ரி ஷெரின் பகுதி மக்களுக்கு வந்து சேரவில்லை. மக்கள் தண்ணீருக்காக கூட வெகுதூரம் நடந்துச் செல்லும் நிலைதான் உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்த மக்கள் தற்காலிக கூடாரங்களிலும், வெட்டவெளியிலும் இரவை கழித்ததாக, இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

"இரவின் குளிரை தாங்கமுடியவில்லை. எங்களுக்கு உதவி தேவை. எங்களுக்கு எல்லாம் தேவை. அதிகாரிகள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் சர்பொல் இ ஷகாப்பைச் சேர்ந்த வீடிழந்த ஒரு இளம்பெண் .

ஒரு உதவி குழு, 70,000 பேருக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக கூறியுள்ளது. ஐ.நா அமைப்பு, நாங்கள் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றுள்ளது

செவ்வாய்கிழமையை தேசிய துக்க நாளாக இரான் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களை செவ்வாய்கிழமை பார்வையிட்ட, இரான் அதிபர் ஹசன், தனியார் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

"இதற்கு யாரை குற்றம் சொல்வது? நமது பொறியாளர்களையா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், யார் கட்டடங்களை அதற்கான விதியின்படி கட்டவில்லையோ, அவர்களை அரசு அதற்கு பொறுப்பாக்கும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இரானில் மட்டும் 530 பேர் இறந்துள்ளதாக இரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பிபிசி-யிடம் பேசிய இரானைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்க அதிகாரி மேன்செளரா பாக்ஹெரி 12,00 வீடுகள் மோசமாக இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.