Header Ads



பாராளுமன்றம் செல்லாது, சாதனை படைத்த ஆறுமுகம்

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி பிரதீப மஹாநாமஹேவ, அமைச்சர் பழனி திகாம்பரமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானும், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வது இல்லையெனவும் குறிப்பிட்டார்.

"மெய்மையை நோக்கி தேசிய கலந்துரையாடலில்" கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய அவர், 

"பியரின் விலையைக் குறைப்பதும், மைலோவில் உள்ள சீனியின் அளவுமே, தற்போதைய அரசாங்கத்தின் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. அரசமைப்புத் தொடர்பான விவாதங்களில் கலந்துகொள்ள, 75 உறுப்பினர்கள் கூட நாடாளுமன்றில் இருப்பதில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 75 பேருக்குக் கூட, அரசமைப்புப் பற்றிய தெளிவு இல்லை.

"யாருக்கு இந்த அரசமைப்பு? மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் அறிந்துக்கொள்வது அவசியம். எனவே, இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

அத்தோடு, புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்த, இந்த அரசாங்கம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகக் கலாநிதி மஹாநாமஹேவ வெளிப்படுத்திய கருத்தை உறுதிப்படுத்துவது போல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை, செயற்பாடுகள் தொடர்பாகக் கண்காணிக்கும் மந்திரி இணையத்தளம், இவ்வாண்டு மே முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பான அறிக்கை காணப்படுகிறது.

இவ்வறிக்கையின்படி, அக்காலப்பகுதியில் ஆகக்குறைந்த அமர்வுகளில், ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார். 4ஆவது ஆகக்குறைந்த அமர்வுகளில், அமைச்சர் திகாம்பரம் கலந்துகொண்டுள்ளார். 2ஆவது இடத்தில் மோகன் லால் கிரேரோவும், 3ஆவது இடத்தில் பிரேமலால் ஜயசேகரவும் காணப்படுகின்றனர்.

இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சட்டதரணி கலாநிதி ஜயதிஸ்ஸ கொஸ்தா, "எமது நாட்டு அரசமைப்பானது, ஐக்கிய அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவே கொண்டுவரப்படவுள்ளது. இதுதொடர்பில் வெளிநாடுகளில் 48 மாநாடுகள் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளன.

அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவது நல்லது, எனினும் மக்களை ஏமாற்றி, புதிய அரசமைப்பைக் கொண்டு வர முயல்கின்றனர்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகேஷ்வரி விஜயனந்தன்

No comments

Powered by Blogger.