ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், "தந்தை இறந்து விட்டார்" எனக் கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, 'தந்தையின் மரண ஊர்வலம்' என்ற பெயரில் புத்தகமொன்றை எழுதி வருகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் ஏன் தோற்றது? எங்கு தவறிழைக்கப்பட்டது? என்பது உட்பட மேலும் பல தகவல்களைப் புத்தகத்தில் அவர் உள்ளடக்கவுள்ளார்.
2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியும் மைத்திரி வசமானது. அது மட்டுமல்ல, மஹிந்த பக்கமிருந்தவர்கள் மைத்திரியுடன் இணைந்து கூட்டரசு அமைக்கவும் பச்சைக்கொடி காட்டினர்.
சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தூக்கப்பட்டதற்கு கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், மஹிந்தவின் சகாக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் தான், "தந்தை மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும், அவர் இறந்த பின்னர் சடலத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது என்று மஹிந்த அணிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார் விஜயமுனி சொய்சா.
தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்து விட்டார். தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரை எப்படி கட்சித் தலைவராக வைத்திருப்பது'' என்பதே அவரின் கருத்தின் சுருக்கமாகும்.
விஜிதமுனி சொய்சா இவ்வாறு கருத்து வெளியிட்ட பின்னர், அரசியல் களத்தில் அது பேசும் பொருளாக மாறியது.
மஹிந்த ராஜபக்ச கூட இதுபற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்தான், அதுபற்றி புத்தகமொன்றை அவர் எழுதவுள்ளார். இதை அவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment