November 21, 2017

சம்மட்டியால் அடித்த விக்னேஸ்வரன், அடாத்தாக பேசிய சுமந்திரன் - ஜான்சிராணி கண்டனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:-

காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட்ட இழப்புகள், பதற்றங்கள் ஆகியவற்றில் இருந்து அப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் உறவுகள் மீளவே இல்லை என்பதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.

இதே போல வவுனியாவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான நான்கு கடைகள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டன. வட மாகாண முதலமைச்சரும், ஓய்வு நிலை நீதியரசருமான சீ. வி. விக்னேஸ்வரன் ஐயா மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்து வெளியிட்டு இருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தேறி உள்ளன. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்துகள் ஒவ்வொரு முஸ்லிம் நபரின் இதயத்திலும் சம்மட்டியால் அடித்த வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

இதே போல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் கல்முனையை நான்கு சபைகளை பிரிப்பது தொடர்பாக தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபையை கேட்கின்ற தார்மீக உரிமை கிடையாது என்று அடாத்தாக பேசி உள்ளார்.

எவை எப்படி இருப்பினும் வன்செயல்கள், வன்முறைகளை தூண்டுகின்ற பேச்சுகள் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிதானம் இழக்காது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளர் என்கிற வகையில் நான் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஏனென்றால் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக கூடி கலந்தாலோசித்து மீண்டும் சந்தித்து பேச தீர்மானித்து உள்ள நிலையில் இவரின் கருத்து வெளியில் வந்து உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பாக இருக்கட்டும் அல்லது பிரிப்பாக இருக்கட்டும் இவரின் கருத்துகள் தமிழ் – முஸ்லிம் மக்களை இணைக்க விடாமல் நிரந்தரமாக பிரிப்பதாகவே அமைந்து விட்டன. அத்துடன் விரோதத்தையும், குரோதத்தையும் தூண்டுகின்ற வார்த்தைகளாக வெளிவந்து விட்டன. என்னை பொறுத்த வரை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் ஆளுகைக்கு உட்பட்ட வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு வெட்கக்கேடாகவும், அவமான சின்னமாகவும் இப்போது கருத நேர்ந்து உள்ளது.

1 கருத்துரைகள்:

இந்த விக்கி ஐயா கூட்டிவந்து பதவி தந்த தலைமைக்கு சவால்விடுத்து, தனது இனத்துக்கான தீர்வைப் பெறமுற்படுகையில், எதிர்கால பதவி ஆசைகாரணமாக காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலையில் ஈடுபட்டு தரம்குறைந்து நிற்கிறார்.
எனவே முஸ்லிம்களைப்பற்றி இவ்வாறெல்லாம் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

Post a Comment