Header Ads



நஸீர் - மௌலானா இடையே கடும்போட்டி - சூடுபிடிக்கிறது உள்ளூராட்சி தேர்தல்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு ஒரே கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், வட்டார ரீதியில் குழுக்களை அமைத்து சமூக முக்கியஸ்தர்கள் மூலமாக அனைத்து வட்டாரங்களுக்குமான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

படித்த, பண்புள்ள, மக்களது நல்லபிமானம் பெற்ற, சமூக நோக்குள்ள மற்றும் கட்சிக்கு விசுவாசமுள்ளவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தவேண்டுமென்ற அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கென மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவும் அனைத்து வட்டாரங்களுக்குமான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை பிரத்தியேகமா மேற்கொண்டு வருகிறார். சுயமாகத் தெரிவுசெய்த வேட்பாளர்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நடவடிக்கையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையினால் ஆதரவாளர்கள் மத்தியில் தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பணியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் எம்.எல்.ரெபுபாசம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர் நகர சபைக்கு ஜே.வி.பி. மற்றும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஏறாவூர் நகர சபைக்கு பத்து வட்டாரங்களுக்குமாக 19 வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.