Header Ads



ஹெம்மாதகம போவோமா..?

-எஸ். ஐ. நாகூர் கனி-

'நாடு நடக்கிற நடையில நமக்கு ஒன்னும் புரியல...'

இது தமிழ்த் திரை இலக்கியத்தின் ஒரு பழைய பாட்டின் ஆரம்ப வரிகள். நம் நாட்டின் இன்றைய கால கட்டத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது, மேற்படி பாடலையே முணு முணுக்கத் தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் தூர நோக்கோடு நாடிப் பிடித்துப் பார்த்த நல்லவர்கள் சிலர், 'முஸ்லிம்களின் வரலாற்றினை எழுத்துருவில் எழுதி வையுங்கள்' என அவ்வப்போது ஆலோசனை கூறி வரலாயினர்.' ஓரூரின் முஸ்லிம்கள் தொழும் பள்ளிவாசலினதும் - அங்குள்ள முஸ்லிம் பள்ளிக்கூடத்தினதும் வரலாற்றினை மட்டுமாவது முதலில் எழுதி வையுங்கள்' என சமூகப் பிரக்ஞையோடு நானும் ஓரிருமுறை பத்திரிகைகளில் எழுதி யிருக்கிறேன்.

சமூகப்பற்றுறுதி மிக்க ஒருசிலர் இந்த சிந்தனைகளைத் தத்தம் வசதி – வாய்ப்புக்கேற்ப செயல்படுத்தி, தங்கள் ஊரின் வரலாற்றினை எழுதி, நூலுருவாக்கி தந்தும் இருக்கின்றனர். சமீபத்தில் வபாஃத்தான ஏ. எச். எம். அஸ்வர், தனக்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்களுக்;;கான இராஜாங்க அமைச்சினை தந்தபோது, தேசிய மீலாத் விழாக்களை ஒட்டி, மீலாத் விழா நடைபெறும் மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை நூலுருவாக்கும் பணிகளை துவக்கிவைத்த முன்னோடியாவார் என்பது கவனிப்புக்குரியது.

இந்த வரிசையில், புது வரவாக – புதுப்பொலிவுடன் வரலாற்று வாடை வீசும் நூலொன்று அண்மையில் வெளி வந்திருக்கிறது. அது ஒரு இனத்தைப்பற்றிய சரித்திரமோ – குறிப்பிட்ட மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய நூலோ அல்ல. இது முழுக்க முழுக்க ஹெம்மாதகம என்ற தனியொரு ஊரைப்பற்றிய – அவ்வூரில் வாழும் முஸ்லிம்களை சுற்றிய ஒரு வரலாற்று நூல். அதன் பெயர் - 'ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு – சமூகவியல் நோக்கு' ஆகும். முந்நூறு பக்கங்களைக் கொண்ட இந்நூல், கல்வி நூற்றாண்டு வெளியீடு 1917 - 2017 ஆகும்.

இதன் ஆசிரியர் எம். எம். ராஸிக் என்பவராவார். ஹெம்மாதகமயின் மண்ணின் மைந்தரான இவர், ஆசிரியராகத் தன் பணியை ஆரம்பித்து, கல்வித்துறையின் பல படிகளை கடந்து, 1990ல் நாடாளுமன்றத்தில் சமகால உரை பெயர்ப்பாளராகப் பணியாற்றிய சிறந்த பன்மொழிப் புலவர். ஒரு ஊரின் முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஒருகுழு திரட்டி, ஒரு கூட்டு முயற்சியாக செய்ய வேண்டிய பணிகளை, தனியொரு மனிதராக நின்று, பல்வேறு சிரமங்களை மனமுவந்து ஏற்று, எழுதிய ஒரு வரலாற்று பொக்கிஷம் இந்நூல் என்றால், அது பொய்யல்ல.

ஹெம்மாதகமயின் ஐக்கிய முஸ்லிம் இளைஞர்களின் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட இந்த வரலாற்று நூல் ஒரு தனிமனிதன் சப்தித்த ஒரு ஊரின் - முஸ்லிம்களின் குரல் எனத் துணியலாம். இந்தக் குரல் ஆறு ஊதுகுழல்கள் மூலமாக ஒலிக்கிறது. அவையாவன: 1. எமது மூதாதையரும் மஸ்ஜித் மைய நிருவாகமும் 2. எமது சமய கலாசாரப் பாரம்பரியம் 3. எமது கல்விப் பாரம்பரியம் 4. எமது சமூகமயமாக்கலும் இலக்கியப் பாரம்பரியமும் 5. எமது பொருளாதார முயற்சிகளும்; நகராக்கப் பாரம்பரியமும். 6. நிருவாக பாரம்பரியமும் இன நல்லுறவும் என்பனவாகும்.
'ஹெம்மாதகம' என்ற பெயர் எப்படி வந்தது? என்ற பெயர் விளக்கத்துடன், ஹெம்மாதகம ஊரின் புறவுருவப் படத்தையும், முஸ்லிம் பிரதேசத்தையும் புகைப்படங்களுடன் விளக்கியுள்ள நூலாசிரியர், மேற்படி ஆறு அத்தியாயங்களில், ஹெம்மாதகமக்கு ஆரம்பத்தில் வந்து குடியேறிய மூதாதையர்களின் - முஸ்லிம்களின் விபரங்களை வரலாற்று வாசம் பூசி வண்ணத்தமிழ்த் தேனில் குழைத்து தந்திருக்கின்றார். அவர்கள் இறை இல்லங்களை உருவாக்கிய சரித்திரம் - அதன் மூலம் உருவான சமய – கலாசாரப் பாரம்பரிய வரலாறு முதலியவற்றை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

இன்று கல்வி மணம் வீசும் பூமியாக ஹெம்மாதகம விளங்குகிறது என்றால், அதற்கு அடிப்படையாக அமைந்த கல்வி பாரம்பரியம் பற்றி நூலாசிரியர் புள்ளிவிபரங்களுடன் பேசுகின்றார். அதன் அறுவடையாக மலர்ந்த கல்வியாளர்கள் - முதுமாணிப் பட்டதாரிகள் - கலாநிதிகள் - வைத்தியர்கள் - சட்டத்துறை அறிஞர்கள் - சட்டத்தரணிகள் பற்றியெல்லாம் தான் பலரின் மூலம் திரட்டிய தகவல்களையும் - தரவுகளையும் நம் ராஸிக் அழுப்பு சலிப்பின்றி எழுதி, வாசிப்போரை நேசிப்போடு அழைத்துச் செல்கின்றார்.

ஹெம்மாதகம மண் உருவாக்கிய கல்விக் காதலர்களை தரப்படுத்தி, வரிசை வரிசையாகத் தந்திருப்பதில் நூலாசிரியரின் கல்வித் தாகம் புரிவதுடன், ஆய்வு மாணவர்களுக்கு நல்ல உசாத்துணை தகவலாகவும் இருக்கின்றது.

கல்வி விடியல் அம்மண்ணில் ஏற்பட்டதை அடுத்து, சமூக மலர்ச்சி, இலக்கிய விழிப்புணர்ச்சி - இலக்கியவாதிகள் - அவர்களில் கவிஞர்கள் - எழுத்தாளர்கள் - ஊடகவியலாளர்கள் போன்றோரின் விபரங்களையும் முறைப்படி வரிசைப்படுத்தியுள்ளார் என்றே கூறல் வேண்டும்.

இன்றைய மனித வாழ்வின் ஆதாரமாகிய பொருளாதாரத் துறையை நூலாசிரியர் மறக்கவில்லை. 1930 முதல் பல பொருளாதார முயற்சிகள் பற்றியும் ராஸிக் பேசுகின்றார். விவசாயம் தொட்டு இன்றைய வாழ்வின் வர்த்தக முயற்சிகள் பற்றியும் விளக்குகின்றார். வர்த்தகத்திற்குப் பேர்ப்போன முஸ்லிம்களில் - ஹெம்மாதகம முஸ்லிம்களின் வகிபாகம் பற்றியும், அவர்கள் நிறுவிய கடை கண்ணிகள் பற்றியும் சிலாகித்து பேசுகின்றார்.

அரசு – தனியார்த் துறைகளில் நிர்வாக ரீதியில் பணிபுரியும் ஹெம்மாதகமயின் மண்ணின் மைந்தர்கள் எவ்வளவு தூரம் ஜொலிக்கின்றனர்;; சாதனை படைக்கின்றனர் என்ற விபரங்களையும் வரிசை கிரமமாக நூலாசிரியர் பேசுகிறார். ஆக, மொத்தத்தில் நூலாசிரியர் ஓர் ஊருக்குத் தேவையான எல்லாத்துறைகளையும் தொட்டு, அதில் தன் ஆராய்ச்சிப் பார்வையை செலுத்தி வேருக்கு வெளிச்சமிடுகின்றார். அதன் மூலம் உரிய விளம்பரத்தைத் தருகின்றார். சம்பந்தப்பட்டோரின் புகைபடங்கள் உரிய இடங்களை அலங்கரிக்கின்றன. நூலாசிரியரின் ஆய்வுக்கான தேடல் முயற்சி பக்கத்திற்குப் பக்கம் பளிச்சிடுகின்றது. ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பாரிய பணியை, ஒரு தனிமனிதன் செய்து முடித்துள்ள செயற்கரிய செயல், சமூகத்தினால் உச்சி மீது வைத்து சதாவும் மெச்சப்பட வேண்டிய நன்றி மறவாமையே ஆகும். 

அழகான வெண்ணிறத் தாளில் சுத்தமான – தெளிவான அச்சில் மிகக் கவர்ச்சியாக அச்சிட்டுள்ள இப்புத்தகத்தின் நிறைவான பணிகளுக்கு முன்னே, அதில் காணப்படும் சின்னச் சின்ன குறைகள் மங்கி மறைந்து போகும். என்றாலும், அடுத்த பதிப்புகளில் அவற்றை திருத்திக் கொள்ளலாமே என்ற நன்னோக்கில், அவைகளை முன் வைத்தலும் தகும்.

இடையிடையே காணப்படும் எழுத்துப் பிழைகள் தொடர்வாசிப்பை முறிக்கவில்லை என்றாலும், மனத்தை சற்றே சிணுங்க வைக்கின்றன. படங்களின் கீழே உரியவரின்   பெயர் குறிப்பிடப்படாதது இமாலய குற்றமல்ல என்றபோதும், இன்னும் கால்நூற்றாண்டு கழிந்த பின்னர் - நாமெல்லாமல் வபாஃத்தான நிலையில், ஒரு பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் பிரசுரமாகியிருந்தால், 'இவரா அவர்?' 'இவர் தானோ?' என்ற ஐயப்பாடுகள்; வாசகரை குழம்பிய குட்டைக்குள் தள்ளிவிடும் அல்லவா? அதனால்  படங்களின் கீழே உரியவர் பெயரை போடுவது, ஓர் ஊடக தர்மம் ஆகும்.

முகப்பட்டை படம் ஊரின் வனப்பை காட்டும் விதமாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காகத் தெரிவு செய்யப்பட்ட வர்ணங்கள் வெளிச்சமாகவில்லை என்ற கவலையை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. ஒரு புத்தகக் கடை அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களின் நடுவே, இது கண்ணைப் பறிக்கும் வண்ணம் 'சுள்'ளென தெரிய வேண்டும். கண்களில் படவேண்டும். அதற்கேற்ற வகையில் பக்க அமைப்பு செய்தவர் சொல்லியிருக்க வேண்டும். கருமை நோக்கிய பச்சை பின்னணியில் (வுஐNவுடாக) வருவதை விட, வெண்மை நோக்கிய வெளிர்பச்சை வரலாமே! சிந்திப்பீர்.

பின்னட்டையில் நூலாசிரியர் பற்றி விபரங்கள் அணிந்துரை – மதிப்புரை – முன்னுரை போன்றவற்றிலிருந்து சில வரிகளைப் பொறுக்கி பிரசுரமாக்கியுள்ள தன் மூலம் தரப்பட்டிருக்கின்றன. பிரஸ்தாப வரிகள் இந்நூலின் வரலாற்று வட்டத்துக்குள் மட்டுமே சுழல்கின்றன. நூலாசிரியரின் விசாலான ஆளுமை – பரந்துபட்ட பார்வை வாசகரின் சிந்தனைக்கு விருந்தாகத் தரப்படவி;ல்லை என்பது சிறு வருத்தமே!

என்றாலும் - மொத்தத்தில் சகோதரர் எம். எம். ராஸிக்கின் இம்முயற்சி காலங்கள் பல கடந்தும் பாராட்டப்பட வேண்டிய நன்முயற்சி. இதற்கான விரிவான ஆதரவை சமூகம் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
மாவனல்லை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த எழுபது கிராம அலுவலர் பிரிவுகளில் நான்கினை மட்டும் உள்ளடக்கிய ஒருசிறு கிராமமாகிய ஹெம்மாதகம கல்வியாளர்கள் பலர் உருவான அறிவு பூமி. இப்போதும் அம்மண் கல்விமணம் விரவியும் - பரவியுமே காணப்படுகின்றது. அம்மண்ணை தரிசிக்க ஒருமுறை ஹெம்மாதகம போவோமா?


No comments

Powered by Blogger.