Header Ads



தனித்தனி இரகசிய பேச்சுக்கள் ஆரம்பம் - தனித்து ஆட்சியமைக்க ரணிலுக்கு வலியுறுத்தல்


அரசாங்கத்திற்குள் அதிகரித்துள்ள நெருக்கடி காரணமாக தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க ஐ.தே.க மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக இரகசியமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இது சம்பந்தமாக ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான சிலரிடம் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் சிலர் தனித்து ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை பெற்றுக்கொள்ள உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

19ஆவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தனித்து ஒரு கட்சி ஆட்சியமைக்குமாயின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும். இதன் காரணமாக அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தின் தற்போதைய நிலைமைகளில் அடிப்படையில் தனித்து ஆட்சியமைக்கும் சாதகமான நிலைமை ஐ.தே.கவிற்கே காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி 107 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான அத்துரலியே ரதன தேரர், ஜனாதிபதிக்கு ஆதவை வழங்கியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.