Header Ads



பாடசாலைகளில் கற்பிப்பதற்காக, பெற்றோர் செய்யும் செலவீனம் அதிர்ச்சியளிக்கிறது - பிரதமர்

நடைமுறையிலுள்ள கல்வித் திட்டம் புத்துணர்வூட்டப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதிகரித்துவரும் பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் காரணமாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் குறிப்பிட்ட அளவில் வேகத்தை இழந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியில் (புனித சூசையப்பர் கல்லூரி) நேற்று நடைபெற்ற கத்தோலிக்க ஆசிரியர் தின நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்விச் செயற்பாடுகளை புத்துணர்வூட்டுவதற்கு புத்தாக்க சிந்தனைகள் அவசியமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் ஒவ்வொரு நகரிலும் மிகச் சிறந்த பாடசாலைகள் இருந்தன. எனினும் தற்போது அப்பாடசாலைகளின் எண்ணிக்கை பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த பாடசாலையொன்றைத் தெரிவு செய்வதற்காக பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச பாடசாலைகளில் கற்பிப்பதற்காக பெற்றோர் செய்யும் செலவீனம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அரச சார்பு பாடசாலைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தரமான கல்வி வழங்குவதில் அரச சார்பு பாடசாலைகள் வழங்கும் பங்களிப்பு பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கும்போது , 1961 ஆம் ஆண்டுகளில் அநேகமான பாடசாலைகள் அரச மயப்படுத்தப்பட்டதனால் நன்மையை விடவும் எதிர் மறையான விளைவுகளே அதிகம் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

புத்தாக்கமுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு தகைமை வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் தேவையென்றும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார். அறிவு, திறமை, நுட்பம்,ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியம் கொண்ட ஆசிரியர்கள் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் இருந்தால் மட்டுமே சிறந்த கல்வி முறையை முன்னெடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.