November 14, 2017

புலிகளினதும், ஜே.வீ.பியினதும் வன்முறை கிளர்ச்சிகளேயொழிய, யுத்தம் அல்ல - விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக் கைபிடித்துப் பார்க்கும் ஒரு கைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன? எனும் கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார்.
இது ஒரு யூகந்தான். ஆனால் இக் கூற்றில் உண்மையிருக்கவுங் கூடும். அரசாங்கம் சிங்களப் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தப் பின்நிற்கின்றது. எங்கே தமது பொருளாதாரக் கொள்கைகளும் தமிழர் சம்பந்தமான உத்தேச அரசியல் தீர்வுகளும் சிங்கள மக்களிடையே தமக்கெதிரான ஒரு அலையை உண்டுபண்ணி விடுவோமோ என்று பயப்படுகின்றனர். எனவே முதலில் தமிழ் மக்களின் கருத்தை அறியப்பார்க்கும் ஒரு நிகழ்வாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறலாம்.
அதாவது பௌத்தத்திற்கு முதலிடம், சமஸ்டி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கையுடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்பார்களானால் சிங்கள மக்களுக்கு அதை எடுத்துக்காட்டி புதிய அரசியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கக்கூடும்.
ஆகவே தற்போதைய தமிழ்த் தலைமைகளின் கருத்துக்களைத் தமிழ் மக்கள் உள்ளுராட்சித் தேர்தல்களில் ஏற்றுக் கொண்டு பெருவாரியாக அக் கருத்துக்களை ஆதரித்தாரானால் மிகக் குறைவான தீர்வை நாம் விரைவாகப் பெற இடமிருக்கின்றது. ஆனால் வருங்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன ஆகும் என்பதைத் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஆய்ந்துணர வேண்டும். கிழக்கைப் போல் வடக்கை ஆக்குவதற்கு அரசாங்கத்திற்கு பல வருடங்கள் அப்பொழுது தேவையில்லை.
சில கட்சிகளும் தமிழ் மக்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பேசுவதை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவர்கள் பிளவை ஏற்படுத்தப்பார்க்கின்றார்கள் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று ஆராய்வோம்.
தமிழ் மக்களின் கொள்கைகளில், நோக்கில், முன்னேற்பாடுகளில் ஒரு புரிந்துணர்வும் ஸ்திரத் தன்மையும் இருக்க வேண்டும் என்றுதான் தந்தை செல்வா காலத்திலேயே சில அடிப்படைகள் வலியுறுத்தப்பட்டன. அவையாவன தாயகம், தன்னாட்சி, தமிழர் தரையிணைப்பு என்பன. இதற்கு உகந்த தீர்வு சமஸ்டியே என்று வலியுறுத்தப்பட்டது.
இதனை 1949ம் ஆண்டு தொடக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தி வந்துள்ளது. தற்போதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இவற்றை வலியுறுத்துகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்களும் ஒருமித்து 1949ம் ஆண்டு தொடக்கம் வலியுறுத்தப்பட்ட கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அவற்றில் இருந்து பிறழ்வது தாம் இருந்த காலத்தில் கட்சிக்காகத் தமது காணி பூமிகளை விற்று வறுமையில் மறைந்த முன்னைய தமிழ்த் தலைவர்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து உடலை வருத்திப் போராடிய எமது இளைஞர் சமுதாயத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் நாம் செய்யும் துரோகமாக முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வகையில் தவறு ஏற்பட்டுள்ளமை எங்கு என்று பார்த்தால் 2009ம் ஆண்டின் பின்னர் “போரில் நாங்கள் தோற்றுவிட்டோம்; நாம் கோருவது கிடைக்காது; யதார்த்த அடிப்படையில் ஏதோ சில சலுகைகளையே நாம் பெற்றுக் கொள்ள முடியும்” என்ற மனோபாவம் எம் தலைவர்கள் சிலரிடையே புகுந்தமையே இதற்கான காரணம் என்று அடையாளம் காண முடியும்.

ஆகவே “போரில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள்; இனி மேல் முன் போல் எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியாது” என்ற ஒரு தோல்வி மனப்பான்மையே இச் சிந்தனைக்கான அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது.
இந்த வகையில்த்தான் இராணுவத்தினரதும் சில சிங்களத் தலைவர்களினதும் எண்ணங்களும் இருந்து வருவதை நாம் காணலாம். “போரில் நாம் தமிழர்களை வென்று விட்டோம். ஆகவே அவர்களிடம் நாம் பறித்த காணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமிழர்கள் கோரும் எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. நாமாக மனமுவந்து தருவதையே அவர்கள் ஏற்க வேண்டும்” என்று சிலர் கூறுவதைக் கேட்டுள்ளோம்.
ஓரிரு விடயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதமேந்தியோர் மத்திய அரசைப் பிடிக்க எத்தனிக்கவில்லை. தாம் வாழ்ந்த இடங்களில் அரசை நிறுவவே முயன்றனர். போர் நடந்த காலத்தில் மத்திய அரசாங்க அதிகாரம் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் கோலோச்சியமை யாவர்க்கும் நினைவிருக்கலாம்.
அரச அலுவலர்கள் மத்திய அரசாங்கத்தாலேயே சம்பளம் கொடுக்கப்பட்டார்கள். மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்தினார்கள். ஆகவே போர் என்று கூறியது இரு இனங்களுக்கிடையேயான போர் அல்ல. அது அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வீ.பி காலத்திலும் அப்படித்தான். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி க்கும் இடையிலேயே போர் நடைபெற்றது.

எனவே விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல.
அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்ந்து வடக்கிலும் தெற்கிலும் அந்தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்ததால் கிளர்ச்சிகளை யுத்தம் என்று அடையாளப்படுத்த முடியாது. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். அவர்கள் கையேற்ற காணிகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் அவர்களால் அன்றி சிவில் அரசாங்க அதிகாரிகள் மூலமாகக் சேர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் எதிர்பார்ப்பு.
போர்க் காலத்தில் கையகப்படுத்திய காணிகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு வைத்துக் கொண்டுவிட்டு அவை எம்முடையவை என்று கூற இராணுவத்தினருக்கு சட்டத்தில் இடமில்லை.
“ஆகவே இராணுவத்தினர் போரில் வென்றார்கள்; எனவே எமக்கு எமது சட்ட ரீதியான நியாயமான கோரிக்கைகளை அதன் பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்தவித உரித்தும் இல்லை” என்று எம்மவர் நினைத்தால் அது முற்றிலுந் தவறான சிந்தனையாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடையவில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்த நாட்டின் ஒரு அங்கமே. அவர்களின் சட்ட ரீதியான உரிமைகளைத் திருப்பிக் கேட்க எத்தருணத்திலும் அவர்களுக்கு உரித்துண்டு.

இன்றைய தமிழ்த் தலைமைத்துவம் தோற்றுவிட்டோம் என்ற மனப்பாங்கில் பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்க நாம் தயார்; ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரின வாதத்துக்கு தொடர்ந்து இடம் கொடுக்க நாம் தயார்; வட கிழக்கை இணைக்காது விட நாம் தயார்; தன்னாட்சி, தாயகம் போன்ற கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சம~;டி முறை சாத்தியம் இல்லை என்று கூறி ஒரு சில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படப் பார்க்கின்றது.
அதாவது நாமாகவே வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவு ஏற்பட ஏதுவாக இருக்கின்றது.

பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையே தாம் கொண்டுள்ளனர். ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லை என்று தமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல்க்கட்சியாக முன்னேற முடியும். அவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதே உசிதம் என்று எமது தொடர் அடிப்படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது.

ஆனால் அவ்வாறான குறைந்த பட்ச தீர்வுகளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளுராட்சித் தேர்தல்களின் போது சம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சில சலுகைகளை எம் மீது திணித்துவிட்டு எமது நீண்டகால அரசியல் பிரச்சனையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடும்.

உண்மையில் இவ்வாறான உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வட கிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம். என மேலும் தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

இந்த விக்கி ஓர் அலம்பல் கேஸ்.

Post a Comment