November 26, 2017

கிந்தோட்டை கறைபடிந்த சம்பவமும், கற்றுக்கொண்ட பாடங்களும்..!!

-எம்.ஏ.எம். நிலாம்-

காலி, கிந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள், தாக்குதல்கள் தீவைப்பு என்பன தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு எடுத்த சில அதிரடி நடவடிக்கை காரணமாக இன்று ஓரளவு சுமுகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட காலி உட்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அச்சச் சூழ்நிலை தொடர்வதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம முதலில் தென் மாகாண மக்களை அச்சம் கொள்ளவைத்தது. அதனையடுத்து. இச்செய்தி காட்டுத்தீ பரவுவது போன்று நாடெங்கும் பேசு பொருளாக மாற்றம் பெற்றது. நல்லாட்சி அரசு பதவிக் காலத்தில் மற்றொரு இனக் கலவரமாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

மகிந்த ராஜபக்ஷ பதவிக் காலத்தின் இறுதிப் பகுதியில் அதாவது 2014 இறுதிக் கட்டத்தில் அளுத்கமவில் இடம்பெற்ற பாரிய வன்செயலுக்கு அடுத்ததாக இந்த வன்முறையை நோக்கப்படுகிறது. ஏதோவொரு வகையில் முழு நாட்டிலும் இனக்கலவரத்தை தோற்றுவிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும்சக்தி பின்னால் நின்று செயற்பட்டு வருவதாகவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது. அன்று அளுத்கம சம்பவத்தின்போது கூட பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் தளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அங்கு வன்முறைகள் கட்டவிழுத்து விடப்பட்டன. அப்போது பாதுகாப்புத் தரப்பு வன்முறைக் கும்பலுக்கு சாதகமாக செயற்பட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டது. அதனால் அதில் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காலி, அளுத்கம உள்ளிட்ட எந்த இடங்களைப் பார்த்தாலும் வன்முறைக் கும்பல் ஒரேவிதமாகத் தான் தமது கைவரிசையை காட்டி வருகின்றன. அவர்களின் காவாலித்தனம் ஓங்கிக் காணப்படுகின்ற நிலையில், அதற்கு பிரதியீடாக முஸ்லிம்களும் அதே காவாலித்தனத்தை தம் கைகளில் எடுக்க முற்படகூடாது. அப்படிச் செய்ய முற்பட்டால் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில வித்தியாசம் இருக்க முடியாது.

இந்த விடயத்தில் காவாலித்தனத்துக்கு எதிராக நாம் கையாள வேண்டிய முறையே வேறுவிதமானதாகும். பொறுமையுடன் அமைதியாக சட்டம் அதன் கடமையைச் செய்ய இடமளிக்க வேண்டும். அது நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பலனைப் பெற்றுத் தரமுடியும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.அரசாங்கம் காலத்துக்குக் காலம் முஸ்லிம்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதாவது சாட்டுப்போக்கு கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றது. அளுத்கம வன்செயலின் போது பொலிஸாரும், அதிரடிப் படையினரும் எப்படி கைக்கட்டி பார்த்துக் கொண்டிருந்தார்களோ அதே வழியைத்தான் காலிச் சம்பவத்தின் போதும் பொலிஸார் நடந்து கொண்டுள்ளனர்.

நாட்டில் மற்றொரு இனவாதத்தைத் தூண்டி முஸ்லிம் சமூகத்தை உருவருக்க வேண்டும் என்ற இலக்குடன் பெரும் இனவாதச் சக்தியொன்று திட்டம் தீட்டி இயங்கிக் கொண்டிருப்பதை அண்மைக் காலமாகவே அவதானிக்கக் கட்டியதாக உள்ளது. எங்காவது ஒரு சின்னச் சம்பவம் நடந்ததாலும் அதனைத தமக்குச் சாதிகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஊதிப் பெருப்பித்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பெருபான்மை மக்களை தூண்டி விடும் செயலில் இந்தச் சக்தி மறைமுகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த காலிக் கலவரத்தின் சூத்திரதாரி யார் என்பது இப்போது மெதுமெதுவாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. பிரதேசத்தில் உள்ள தூபாராம விகாரையில் தலைமைப் பிக்கு தலைமையில் கூடிய கூட்டத்தின்போது, இந்த காடைத்தனத்துக்கு தூபமிடப்பட்டதாக அறியவந்துள்ளது. இனவாதச் சக்தியொன்று இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளது. அத்தோடு பிரதேச பொலிஸ் தரப்பினர் சேர்ந்த சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தக் கலவரத்தின் பிரதான நோக்கம் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகும். ஆரம்பத்தில் அது அளுத்கமவில் வெற்றியளிக்காத போதும் முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது அதில் அந்தச் சக்தி ஓரளவு திருப்திகொண்டது.

அதன் வழியைப் பின்பற்றியே காலி கலவரத்துக்குத் திட்டமிடப்படடுள்ளது. திட்டத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை காலியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையில் சிறு முறுகல் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. எனினும் பொலிஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசப்படுத்தி விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பிள்ளைக்கும் மருத்துவச் செலவுக்காக உதவித் தொகையொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இரண்டு சமூகங்களுக்கிடையேயும் உள்ள இளைஞர்கள் பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த முறுகல் பெரும் மோதலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த விடயத்தில் பொறுப்புமிக்க மதத் தலைவர்களோ, பொறுப்புவாய்ந்த அமைப்புகளோ உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை விசாரிக்கத்தக்கதாகும்.

பொலிஸாரும், அதிரடிப்படையினரும் அளுத்கமவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தபோது எவ்வாறு நடந்துகொண்டார்களோ, அதே பாணியில் தான் கிந்தோட்டையிலும் செயற்பட்டிருக்கின்றனர். இது பொலிஸ் தரப்பு மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. அளுத்கம சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களே கிந்தோட்டச் சம்பவத்திலும் தொடர்புபட்டிருப்பதையே இது வெளிக்காட்டுகின்றது.

மேலிடத்து உத்தரவுகள் எப்படி அமைகின்ற போதிலும், அங்கு இந்தச் சக்திகள் தமக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்துச் செயற்பட்டு வருவதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே வன்முறைகள் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் கருத்து செயற்பட்டது யார்? என்பது கண்டறியப்படவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் கறைபடித்த சம்பவம் தென் மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்கள் அச்சச் சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை சமூகம் எப்போதும் முஸ்லிம்கள் விடயத்தில் சந்தேகக் கண்டோ பார்க்கின்றனர்.

இதற்குப் பிரதான காரணம் கடும் போக்குவாதச் சக்திகள் அப்பாவி சிங்கள இளைஞர்களை தூண்டிவிட்டு காடைத்தனத்தில் ஈடுபடச் செய்வதாகும். இது தான் அன்று அளுத்கமவிலும், இன்று காலி கிந்தோட்டையிலும் நடந்துள்ளது. அடுத்து எங்கு எப்போது நடக்கும் என்ற அச்சத்துடனேயே முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டருக்கின்றனர்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு எந்த அரசாங்கத்தினாலும் உத்தரவாதப்படுத்த முடியாது என்ற அவநம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் இன்று காணப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கிந்தோட்டைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதேச முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது அதிருப்தியை பிரதமரிடம் நேரடியாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் பிரதமர் அங்கு மக்கள் மத்தியில் தெரிவித்த கருத்துக்கள் ஆழமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகவே நோக்க வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ்ந்த மக்களிடையே அநாவசியமான மோதலை ஏற்படுத்தி இனவன்முறையை கட்டவிழ்த்துவிட்ட மறைமுக சக்திகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்திருக்கிறார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டிருக்கின்றார்.

பிரதமர் வழங்கியிருக்கும் இந்த உத்தரவாதம் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். நொந்துபோன மக்களுக்கும் வெறும் ஆறுதல் வார்த்தையாகி மட்டும் இது அமைத்துவிடக் கூடாது. அரசாங்கத்துக்குக் கிந்தோட்டைச் சம்பவம் ஒரு செய்தியை சொல்கின்றது. அதுதான் அரசியல்வாதிகள் மத்தியிலும், பாதுகாத்த தரப்பு மத்தியிலும் நுழைந்திருக்கும் இனவாதச் சிந்தனை, கடும்போக்குவாதத் தரப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும். அதன் மூலமே இது போன்ற வன்முறைகள் எதிர்காலத்தில நாட்டில் எந்தப் பகுதிக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும்.
முஸ்லிம் சமூகமும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு தடியெடுத்தவனெல்லாம். தண்டங்காரணமாக மாற்றிவிட முனையக்கூடாது. அமைதி காக்கவேண்டும். பொறுமையுடன செயற்பட வேண்டும். சட்டத்தை எமது கைக்குள் எடுக்க முற்பட்டால் விளைவுகள் விபரீதமானவையாகவே மாறும். இதனையே நாம் அளுத்கம, கிந்தோட்டைச் சம்பவங்கள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களாகும்.

முஸ்லிம்கள் வாழும் சகல பகுதிகளிலும் புத்திஜீவிகளை உள்ளடக்கிய விழிப்பூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இளைஞர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்லிணக்கததை கட்டியெழுபப அவசிய மான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையே முறு கல் ஏற்பட இடமளிக்கப்படக்கூடாது. அமைதி, பொறுமை, சமாதானம் இந்த ஆயுதங்களையே சகல சந்தர்ப்பங்களிலும் தாம் பயன்படுத்தவேண்டும்.

இன்னொரு அசம்பாவிதம் நடக்கும் வரை காத்திராமல் உடனடியாக அரசும் புத்திஜீவிகளும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். மனிதாபிமானத்தை சகல மக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லவேண்டும். இனம், மதம். மொழி கடந்து மானுடநேயத்தை உயர்த்திப் பிடிப்போமானல் எதிர்காலம் ஒளிமயமானதாகவும், அமைதி நிறைந்ததாகவும் மாறமுடியும். இதனை உணர்ந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும். இது தான் காலத்தில் தேவையாகும். 

1 கருத்துரைகள்:

Salam முஸ்லிம்களின் பிச்சையில் ஆட்சியை அமைத்துக் கொண்டு முஸ்லிகளை அழித்துவிடுமாறு கூறுகிறது இந்த வெட்கமில்லா அரசைக் கேவலப்படுத்தி அழித்துவிடுமாறு அல்லாஹ்விடம் அணைவரும் அனுதினமும் கட்டயமாக கேளுங்கள் அவனையைத் தவிர வேறு யாரும் நமக்குக் உதவ மாட்டார்கள்

Post a Comment