Header Ads



அஸ்ரபின் மரணம் தொடர்பில் 71 பக்க ஆவணங்கள் சிக்கின - இளைஞர்களின் முயற்சிக்கு வெற்றி!


(முகம்மட் டீன்)

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான விசாரணை இன்று 20-11-2017 நடைபெற்றது.

இவ்விசாரணயானது கொழும்பு - 08 சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இவ் அமர்வுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், இலங்கை தேசிய சுவடிகள் கூடத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், முறைப்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

காலை  11 மணியிலிருந்து மதியம் 01 மணிவரை விசாரணைகள் நடைபெற்றன.

இன்றைய அமர்வில் அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான விசாரணையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இவ்விசாரணையில் கலந்து கொண்ட தேசிய சுவடிகள் கூட அதிகாரிகள் 71 பக்க ஆவணத்தை சமர்ப்பித்திருந்தனர்.

எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியையே இன்று அவர்கள் கையளித்திருந்தனர்.

எனினும் இந்த ஆவணங்கள் முழுமையானவையாக இருக்கவில்லை என தெரியவருகின்றது. இந்த 71 பக்க ஆவணத்தில் மூன்று பக்கங்கள் மாத்திரமே இருந்தன. பக்கங்களான 69,70,71ம் பக்கள் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தன. ஏனைய ஆவணங்கள் கையளிக்கப்படவில்லை.

அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பான ஏனைய ஆவணங்களுக்கு என்ன நடந்துள்ளன என்ற விடயமே இன்றைய அமர்வின் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

காணாமல் போயுள்ள ஏனைய பக்கங்களில் மரணத்திற்கான விசாரணை முன்னெடுப்புக்கள், வாக்குமூலங்கள், அறிவுறுத்தல்கள், ஏனைய நடவடிக்கைகள், கட்டளைகள் என்பன குறிப்பிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவ்விசாரணை அறிக்கையானது சுமார் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரு ஆவணம் 71 பக்கங்களையும் மற்றயை ஆவணம் சுமார் 300 பக்கங்களையும் கொண்டிருக்கலாம் என இன்றைய அமர்விலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலக மேலதிக அதிகாரி குறித்த விசாரணை அறிக்கை தேசிய சுவடிகள் கூடத்திற்கு கையளிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேசிய கூட அதிகாரிகள் அவ்வாறான முழு ஆவணம் தேசிய கூடத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்றைய விசாரணை அமர்வில் தேசிய சுவடிகள் கூடத்திலிருந்து வழங்கப்பட்ட 71 பக்கங்களில் எஞ்சியிருந்து 03 பக்கங்கள் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் முறைப்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுவரைக்கும் அஸ்ரப் அவர்களின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக பலர் முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இரண்டு இளைஞர்களின் முயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளது.

சர்ஜூன் ஜமால்டீன் மற்றும் ஏ.எல்.ஆஸாத் ஆகிய இரண்டு இளைஞர்களும் அஸ்ரப் அவர்களின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு கடந்த பல வருடங்களாக முயற்சித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அஸ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில்  ஜனாதிபதி மரண விசாரணை அறிக்கையை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் முயற்சியின் பலனாக இன்றைய விசாரணையில் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அறியவருகின்றது.

இவர்கள் இருவரும் இலங்கை முஸ்லிம்களுக்கு யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரும் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முக்கிய ஆவணம் ஒன்றை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.