Header Ads



றிசாத்திற்கு, யாழ்ப்பாண முஸ்லிம்களின் திறந்தமடல்...!

1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திலும் 1983ம் ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திலும் வடமாகாணசபை மற்றும் மத்திய அரசிலும் சிறந்த அரச கொள்கை இருக்கவில்லை.

நீண்டகால (பழைய) அகதிகள் என்ற வரையறைக்குள் அவர்கள் முடக்கப்பட்டிருந்ததினால் புதிய அகதிகளுக்கென்று இதுவரை வழங்கப்பட்டுவந்த வீட்டுத்திட்டத்தினை பெறுவதில் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்துவந்தனர். 

மேற்படி இரண்டு இனத்தவர்களின் அபிலாசைகள் மற்றும் யதார்த்த நிலைகள் கவனத்தில் கொள்ளப்படாமலேயே மீள்குடியமர்தலுக்கான திட்டவரைபுகளும் நிபந்தனைகளும் திரைமறைவில் உருவாக்கப்பட்டு அவர்கள் மீள் குடியமர்தலில் கட்டாய நிபந்தனைகளாக திணிக்கப்பட்டிருந்தன, அவற்றினை ஒழுகி வீட்டுத்திட்டத்தை பெறுவதில் மேற்படி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிநோக்கினர், அதன் காரணத்தினாலேயே அவர்களுடைய மீள்குடியேற்றம் மந்தகதியில் நகர்ந்துகொண்டிருந்தது.

இந்த நிலை மாற்றம் பெற்று நீண்டகால அகதிகள் என்ற வரையறைக்குள் முடக்கப்பட்டிருக்கும் அனைவரும் இனமத பேதம் பாராமல் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்த படவேண்டும் என்ற, கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் உன்னத முயற்சியின் பயனாக, 2016.07.05ம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்கீழ் வடமாகாணத்தில் இருந்து நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் இணைத்தலைவர்களாக கௌரவ அமைச்சர்களான D.M சுவாமிநாதன், அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் துமிந்த திசாநாயக ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தபோதிலும் மேற்படி செயலணி உருவாக்கத்தின் கதாநாயகன் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் என்பதனை மருத்துக்கூறுவதற்கு இடமில்லை.

வடமாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுள் ஒருவராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இருந்ததும், அவருடைய அரசியல் பயணத்தில் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சில் பதவியேற்று, பாரபட்சம் பாராது சிறந்தமுறையில் செயற்பட்டு, அகதி மக்களின் தேவைகள் மற்றும் அபிலாசைகளை நன்கு உணர்ந்திருந்ததின் காரணத்தினாலேயே தற்காலத்தில் அகதிமக்களாக இன்னலுற்றுவரும் வடமாகாண முஸ்லிம் மக்களின் அவல நிலையினை உணர்ந்துகொள்ள முடிந்தது.

மேலும் மீள்குடியேற்றத்துக்கான வடக்கு செயலணியின் திட்டப்பணிப்பாளர் S.M யாசீன் (பொறியியலாளர்) அவர்களின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தில் வசித்துவரும் வடமாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் திட்டமிட்டமுறையில் மேற்படி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன, இது வரவேற்கத்தக்க விடயமாகும் , ஆனால் யாழ் மாவட்டத்தில் வடக்கு செயலணியின் தலைமைத்துவ செயற்பாடோ நிர்வாக கட்டமைப்போ இல்லாமல் தனிப்பட்டவர்கள் ஒருசிலரால் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் மேற்படி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

# இதனை யாழ் மாவட்டத்தில் செயற்படுத்துவது யார் ?
# இதனை யாழ் மாவட்டத்தில் விநியோகிக்க வடக்கு செயலணியினதும் யாழ் பிரதேச செயலகத்தினதும் அனுமதி உள்ளதா ?
# பதியப்பட்ட விண்ணப்பங்களை பொறுப்பேற்பது யார் ?
# மிகவும் பொறுப்புவாய்ந்த இச்செயற்பாட்டில் வடக்குச் செயலணி பொறுப்பற்றிருப்பது ஏன்?

என்ற கேள்விகளும் குழப்ப நிலைகளும் யாழ் மாவட்டத்தில் உருவாகியுள்ளன என்பதனை கௌரவ அமைச்சர் அவர்களின் மேலான கவணத்திற்கு கொண்டுவருவதுடன், வடக்கு செயலணியின் செயற்திட்டத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்தி உதவித்திட்டத்தினை பெற்றுக்கொள்ள தகுதியான அனைவருக்கும் பெற்றுகொடுக்கக்கூடியவாறு வடக்கு செயலணியின் உப அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கும் அதற்கு தகுதியான அதிகாரிகளை நியமிப்பதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி,

இவ்வண்ணம்,
R.K சுவர்கஹான் / சுனீஸ் - (JCSE).

No comments

Powered by Blogger.