Header Ads



பெரும் தொகையான ரோஹின்யர்கள், பங்களாதேஷ் நோக்கி மீண்டும் படையெடுப்பு


கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 582,000 ஐ எட்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. எல்லைப் பகுதியில் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் நிர்க்கதியாகியிருப்பதாகவும் அது எச்சரித்தது.

கடந்த 48 மணி நேரத்திற்குள் மாத்திரம் 10,000 தொடக்கம் 15,000 அளவான புதிய அகதிகள் எல்லை பகுதியை அடைந்திருப்பதாக ஐ.நா கூறியது. மியன்மாரில் தொடரும் வன்முறைகளில் ரொஹிங்கிய முஸ்லிம் கிராமங்கள் தீ மூட்டப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய அகதிகளின் வருகை குறித்து கவலை வெளியிட்டிருக்கும் ஐ.நா, எல்லைக்கு அருகில் நிர்க்கதியாகும் அகதிகள் பட்டினி மற்றும் நீர் வறட்சியால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

புதிதாக வரும் அகதிகள் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் எல்லைப் பகுதியின் ஆளற்ற பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பெயரை வெளியிடாத பங்களாதேஷ் எல்லை காவல் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

தமது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தப்பி வரும் இந்த அகதிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் நிர்வாகத்தை ஐ.நா அகதிகளுக்கான நிலையம் கேட்டுள்ளது.

இவ்வாறு தப்பி வரும் அகதிகள் பங்களாதேஷை அடைய ஒரு வாரம் பயணித்த அனுபவங்கள் பற்றி ஐ.நா அதிகாரிகளிடம் விபரித்துள்ளனர். பெரும்பாலான அகதிகள் பங்களாதேஷ் எல்லையை கடப்பதற்கு அனுமதி கிடைக்கும் வரையில் வயல்வெளிகளில் காத்துள்ளனர்.

மியன்மாரின் ரகின் மாநிலத்தில் உள்ள புதிடொங் மாவட்டத்தில் இருந்தே புதிதாக அகதிகள் வந்துள்ளனர்.

இந்த மாவட்டம் பங்களாதேஷ் எல்லையில் இருந்து தொலைதூரத்தில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது குடும்பத்தினருடன் எல்லையை அடைந்த மொஹமட் ஷெயெப் கூறியதாவது, “இராணுவம் எனது சகோதரரை கொன்றது. உயிரை காக்கவே நாம் தொலை தூரத்தில் இருந்து நடந்து வந்தோம்” என்றார்.

புதிய அகதிகளின் வருகையோடு ஐ.நாவின் முந்தைய எண்ணிக்கையில் 45,000 உயர்ந்து மொத்த அகதிகளின் எண்ணிக்கை 582,000 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையில் எல்லையில் நிர்க்கதியாகி இருக்கும் ஆயிரக்கணக்கானோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மார் துருப்புகள் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடுவதாக ஐ.நா குற்றம்சாட்டுகிறது. 

No comments

Powered by Blogger.