Header Ads



"அஷ்ரபின் ஹெலியை தகர்த்­த மூர்த்திக்கு, பிர­பா­கரன் வழங்கிய தியா­கிகள் பட்டம்"

சிங்களத்தில்: ரமேஷ் வரல்லேகம தமிழாக்கம்: நஜீப் பின் கபூர்

அஷ்ரப்பின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இந்த நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்­கிரஸ் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நாட்டு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் அவர் மறக்­கப்­பட முடி­யாத ஒரு பாத்­திரம். எனவே அவரைப் பற்­றிப்­பே­சு­வ­தற்கு நிறை­யவே அர­சியல் கதைகள் இருக்­கின்­றன. இந்த எல்லாக் கதை­களை விடவும் அவ­ரது மரணம் தொடர்­பான பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் மக்கள் மத்­தியில் இருந்து வரு­கின்­றன.

அன்­றைய துறை­முக அமைச்­ச­ராக பத­வி­ வ­கித்த எம்.எச்.எம்.அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 16 ஆம் திகதி காலை பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் மைதா­னத்­தி­லி­ருந்து இலங்கை விமா­னப்­ப­டைக்குச் சொந்­த­மான எம்.ஐ. 17 என்ற ஹெலிகொப்­டரில் அம்­பாறை நோக்கிப் பய­ணிப்­ப­தற்­காக ஏறு­கின்றார். அப்­படி ஏறி­ய­வ­ருக்கு தான் பிறந்த அந்த மண்ணில் போய் கால்­ப­திக்கும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. 

ஆகாய வெளிக்குள் காலை 9.05க்கு நுழை­கின்ற அந்த ஹெலி 25 நிமி­டங்கள் கழிந்து மாவ­னல்­ல-­ அ­ர­நா­யக்க என்ற இடத்தில் மலைப்­பாங்­கான பிர­தே­சத்தில் விபத்­திற்­குள்­ளா­கின்­றது. இந்த விபத்தில் அஷ்ரப் உட்­பட இன்னும் 14 பேர் கொல்­லப்­ப­டு­கின்­றார்கள். இந்த மர­ணங்கள் தொடர்­பான மர்­மங்கள்  இன்னும் புரி­யாத புதி­ராக இருந்து வரு­கின்­றன.

2000 ஆம் ஆண்டு நாட்டில் போர் நடந்து கொண்­டி­ருந்த காலப்­ப­குதி. 2000 ஆம் ஆண்டு  ஒக்­டோபர் 10 ஆம் திகதி நடக்­கின்ற பொதுத் தேர்தல் தொடர்பில் நாட்டில் அர­சியல் களம் சூடேறி இருந்த நாட்கள் அவை. இந்த காலப்பகு­தியில் முஸ்லிம் காங்­கி­ரசின் செயற்­பா­டு­களும் அஷ்ரப் புதி­தாக ஆரம்­பித்த தேசிய ஐக்­கிய முன்­ன­ணியும் (நுஆ) நாட்டில் ஒரு அர­சியல் மாற்றம் தொடர்­பான சமிக்­ஞை­களை வெளிக்­காட்டிக் கொண்­டி­ருந்­தன.

சந்­தி­ரிக்கா அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்த அந்தக் காலப்­ப­கு­தியில்  நாட்டில் ஓர் அர­சியல் மாற்­றத்­திற்­கான செயல்­பாட்டில் அஷ்ரப் இறங்கி இருப்­பது தெரி­ய­வந்­தது. இதனால் அஷ்­ரஃபின் மரணம் எல்­ரீரிஈ நட­வ­டிக்­கை­யா­கவும், அர­சியல் சூழ்ச்­சி­யா­கவும் மற்றும் சாதா­ரண விபத்­தா­கவும் ஊட­கங்­க­ளிலும் பொது மக்­க­ளி­டத்­திலும் பேசப்­பட்டு வந்­தது.

இதனால் என்ன நடந்­தது என்­பது தொடர்­பாக அந்த நாட்­களில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மையார் இதுபற்­றிய தக­வல்­களைத் தேடிப்­பி­டிப்­ப­தற்­காக தனி நபர் ஆணைக் குழு­வொன்றை நிறு­வினார். அதற்கு ஓய்வு பெற்ற நீதி­பதி எல்.கே.ஜீ.வீர­சே­கர என்­பவரை நிய­மித்­தி­ருந்தார். 

இந்த ஆணைக்­குழு தனது தேடு­தல்­களை நடாத்­தி­ய­போது அஷ்­ரபின் மரணம் தொடர்பில் பல்­வே­று­பட்ட தக­வல்கள் வெளியே வந்­தன. எனினும் அவை ஊட­கங்­களில் விளக்­க­மாக சொல்­லப்­ப­ட­வில்லை.

அப்­படி வெளிவந்த ஒரு கதைதான் தட்­டச்­சுக்­காரர் மூர்த்தி என்­பவர் பற்­றி­யது. இந்த மூர்த்தி வைத்­தி­ருந்த தட்­டச்சை பரி­சோ­திக்க முயன்ற போது அது தேவை­யில்லை; இவர் என்­னு­டைய ஆள் என்று அஷ்ரப் அந்த இடத்தில் சொல்­லி­ய­தான கதை.  இந்த மூர்த்­திதான் பய­ணத்தின் நடு­வில்­வைத்து ஹெலியை தகர்த்­து­விட்­டி­ருக்­கின்றார். இவ­ருக்கு பிற்­கா­லத்தில் எல்­ரீரிஈ தலைவர் பிர­பா­கரன் தியா­கிகள் பட்டம் கொடுத்துக் கௌர­வித்­தி­ருக்­கின்றார். பொலிஸ் மற்றும் உள­வுத்­து­றை­யினர் கூட மூர்­த்திக்கு இப்­படி விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது என்று கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். 

ஆனால் இந்தத் தக­வல்­களை எல்லாம் உறுதி செய்த எந்த ஆவ­ணங்­க­ளையும் இதுபற்றி ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு இதுவரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. சந்­தி­ரி­கா­வுக்குப் பின்னர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­திரி கூட இந்த ஆணைக் குழுவின் அறிக்­கையை இது­வரை பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை. 

இப்­போது இதுபற்­றிய பேச்சு 17 வரு­டங்­க­ளுக்குப் பின் விவா­தத்­திற்கு வந்­தி­ருக்­கின்­றது. முன்னாள் அமைச்­சரும் மு.கா.வின் கடந்த காலத் தவி­சா­ள­ரு­மான பஷீர் சேகு­தாவூத், அஷ்ரப் மரணம் தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட  ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு என்ன நடந்­தது என்ற கேள்­வியைத் தகவல் அறியும் உரி­மையின் கீழ் எழுப்பி இருக்­கின்றார். இந்தக் கேள்­விக்குப் பதில் வழங்­கு­வதை ஜனா­தி­பதி செய­லகம் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றது. 

இது தொடர்­பாக பஷீர் சேகு­தாவூத் தற்­போது முறைப்­பா­டொன்றை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு­விடம் சமர்ப்பித்தி­ருக்­கின்றார். அவரின் இந்த முறைப்­பாடு தொடர்­பாக வரு­கின்ற 16 ஆம் திகதி ஆணைக்குழு­வுக்கு வரு­மாறு அவர் கேட்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அந்த நாட்­களில் அவர் வெளி­நாட்டில் இருப்­பதால் ஆஜ­ராக முடி­யாது என்று தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் இப்­போது அவர் ஆணைக்­குழு முன் ஆஜ­ராகத் தயா­ராக இருப்­பதால் 17 வரு­டங்­களின் பின்னர் இன்று இந்த அஷ்ரஃப் மரணம் பேசுபொரு­ளாக எடுத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

இது தொடர்­பாக ‘ஜன­யு­கய’ என்ற சிங்­க­ள ­வார ஏடு தகவல் அறியும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த கம்­மன்­பி­ல­விடம் விளக்கம் கேட்ட போது இந்த விவ­காரம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட இருப்­பதால் அது பற்றி இந்த நேரத்தில் தான் பதில் வழங்குவது  பொருத்தமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது பற்றி அஷ்ரபின் மனைவி ஊடகங்களூடாக விடுத்த வேண்டுகோளுக்கும் இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் பஷீர் சேகுதாவூத் 'ஜனயுகய' இதழுக்கு வழங்கிய செவ்வியை தமிழில் தருகிறோம். 

அஷ்ரப் மர­ணித்து இன்று 17 வரு­டங்களாகின்­றன. என்ன திடீ­ரென இப்­போது இது பற்­றித் ­தேட முனைந்­தி­ருக்­கின்­றீர்கள்?

பதில்: இந்த விட­யத்தில் என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை இந்த நாட்டு மக்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என்ற தேவை எனக்கு ஏற்­பட்­டது. தகவல் அறிந்து கொள்ளும் உரி­மையின் கீழ் மறைந்­தி­ருக்­கின்ற இந்த விட­யத்தில் உண்­மை­களைக் கண்­ட­றி­கின்­ற­போது, இது தொடர்­பாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ரீதியில் சில குழுக்கள் முன்­னெ­டுத்துச் செல்­கின்ற பொய்கள் எல்லாம் முடி­வுக்கு வரும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பல மாதங்கள் கடந்தே இந்த தனி­நபர் ஆணைக்­கு­ழுவை நிய­மனம் செய்தார். அத்­துடன் இதுபற்­றிய அறிக்­கையும் அந்தக் காலத்­தில்தான் கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யானால் ஏன் அந்த நாட்­களில் இது வெளி­வ­ர­வில்லை.?
அந்த நாட்­களில் இதுபற்றி நான் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். 2001 ஜன­வரி முதலாம் திகதி தனி­நபர் ஆணைக்­குழு நிய­மனம் செய்­யப்­ப­டு­கின்­றது. இது­பற்­றிய தக­வல்­க­ளைத் ­தே­டிய ஆணைக்­குழு  மூன்று மாதங்­களின் பின்னர் தனது அறிக்­கையை ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் கைய­ளித்­தி­ருக்­கின்­றது. என்­றாலும் அது மக்கள் பார்­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­படவில்லை. இது தொழி­நுட்­பக்­கோளாறால் நடந்­ததா? அல்­லது எல்­ரீரிஈ வேலையா அல்­லது வேறு ஏதும் சதியா என்று அறி­விக்க வேண்டும். சிக்கல் இல்­லா­விட்டால் ஏன் நாட்­டுக்கு இதனைப் பற்றி சொல்­லாமல் மறைக்க வேண்டும்.

இதுபற்றி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தாங்கள் கேட்­ட­போது என்ன நடந்­தது?

இதுபற்­றிய தக­வல்­களை எனக்குத் தரு­வ­தற்கு அவர்கள் மறுத்­து­விட்­டார்கள். இரண்­டா­வது முறை­யா­கவும் தகவல் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து இதனைப் பெற்றுக் கொள்ள முயன்­ற­போது அத­னைத்­தே­டு­வது கடி­ன­மாக இருக்­கின்­றது என்று கூறி­விட்­டார்கள். அவ்­வாறு எப்­படி சொல்ல முடியும்? இதற்கு முன்­புள்ள பழைய தக­வல்கள் கூட பாது­காப்­பாக இருக்­கின்­றது. ரீ.பி. ஜயா­வு­டைய தக­வல்கள் கூட இருக்­கின்­றது. இது மட்டும் எப்­படிக் காணா­மல்­போக முடியும்.

அப்­ப­டி­யானால் அந்த நாட்­க­ளி­லேயே இது­பற்றி கேட்டுப் போராடி இருக்­க­லாமே?

அந்த நாட்­களில் அஷ்­ரபின் மனைவி கூட அர­சாங்­கத்தில் இருந்தார். அவர் சந்­தி­ரி­கா­வுடன் மிகவும் நெருக்­க­மான உறவில் இருந்தார். ஆனால் அது நடக்­க­வில்லை. நான் ஒரு சின்ன மனிதன். அல்­லது மு.கா.தலைவர் ஹக்­கீ­முக்கும் இதுபற்றி கேட்க இருந்­தது. இது அவர்­களின் கட­மையும் கூட. அவர்கள் அதனைச் செய்­ய­வில்லை.  


இன்று அஷ்ரப் தேடி­வைத்­தி­ருக்­கின்ற செல்­வாக்கில் அவர்கள் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு இது பற்றித் தேட­வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. எல்­லா­வற்­றையும் அவர்கள் கைவிட்­டி­ருக்­கின்­றார்கள். அதனால் நான் இதனைத் தேட நினைத்தேன்.  இதில் எனக்கு சந்­தேகம் இருக்­கின்­றது. 

எப்­ப­டிப்­பட்ட சந்­தேகம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது?

எனக்கு இப்­படி ஒரு சந்­தேகம் இருக்­கின்­றது. விமா­ன­மோட்­டிக்குக் கூட தெரி­யா­த­வ­கையில் சூச­க­மாக ஹெலிகொப்­டரில் தொழி­நுட்ப ஒத்­து­ழைப்பு வழங்கும் பிரிவில் மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அமைச்சர் அஷ்ரபை நீங்கள் கடை­சி­யாக எப்­போது சந்­தித்தீர்கள்? அந்த சந்­திப்பில் அவர் என்ன பேசினார் என்­ப­தனை மக்கள் தெரிந்து கொள்ள ஆவ­லுடன் இருப்­பார்கள்.?

அது ஒரு தேர்தல் சீசன் மட்­டக்­க­ளப்பில் தேர்­த­லுக்கு நிற்­கு­மாறு அவர் என்­னி­டத்தில் கேட்­டி­ருந்தார். அந்த நாட்­களில் அஷ்­ர­பிடம் இரு சனி ­கார்கள் இருந்­தன. அதில் ஒன்றை எனக்குத் தரு­மாறு அவர் செய­லா­ள­ரி­டத்தில் சொல்லி இருந்தார். இதுபற்றி என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்று கேட்­ப­தற்­காக அன்று காலை அவ­ரு­டைய கொழும்பு வீட்­டிற்கு சென்றேன். என்னைக் கண்­டதும் 'காரைப் பெற்றுக் கொண்­டீர்­களா?' என்று அவர் என்­னி­டத்தில் கேட்டார். 'இன்னும் கிடைக்­க­வில்லை சேர்' என்று அவ­ரி­டத்தில் நான் சொன்னேன். 
அப்­போது சத்தம் போட்டு 'ரபீக்' என்று கூப்­பிட்டார். அவர்தான் அவ­ரு­டைய செய­லாளர். அந்த நாட்­களில் அவர்தான் துறை­முக அதி­கார சபையின் பிரதித் தலைவர். கார் பற்றி அவ­ரிடம் கேட்க இன்னும் கொடுக்­க­வில்லை என்று அவர் கூற, 'அவ­ச­ர­மாக காரை எடுத்து வாருங்கள்' என்று ரபீக்­கிடம் அஷ்ரப் கூறினார். 

அப்­போது உள்ளே இருந்து காரை டிரைவர் ஒருவர் எடுத்து வந்தார். அஷ்ரப் டிரைவர் கையி­லி­ருந்த சாவியை எடுத்துக் கொண்டார். 'பஷீர் போவோம்' என்று என்னை முன் ஆச­னத்தில் அம­ர­வைத்துக் கொண்டு  அஷ்ரஃப் காரை எடுத்தார். அஷ்ரப் காரை எடுப்­பதைக் கண்ட பாது­காப்பு அதி­கா­ரியும், அசித பெரே­ராவும் (மு.கா தேசிய பட்­டியல் உறுப்­பினர்) காரில் ஏற வந்­தார்கள். அவர்­களை வேறு ஒரு­காரில் பின்னால் வரு­மாறு அஷ்ரப் சொல்லி விட்டார். அதன் பின்னர் நாங்கள் நேரே அலவி மௌலா­னாவின் கல்­கிஸ்சை வீட்­டிற்கு போனோம். 

'பஷீர் தேர்­த­லுக்கு நிற்­கின்றார் அவ­ருக்கு ஆசீர்­வாதம் கொடுங்கள்' என்று அஷ்ரப் மௌலா­னா­விடம் கேட்டார். அந்தப் பய­ணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கு வந்து காரைத் திறந்து கொண்டு இறங்கும் போது அந்த இடத்தில் ரபீக்கும் அசித்த பெரே­ராவும் நின்­று­கொண்­டி­ருந்­தார்கள். அப்­போது அவர்­க­ளி­டத்தில் அஷ்ரப் 'என்ன நீங்கள் பஷீ­ருடன் கோபமா?' என்று கேட்டு விட்டு என்னைக் கட்டி அணைத்­து­விட்டு காரின் சாவியை என்­னி­டத்தில் தந்தார். 

அப்­போது 'என்­னுடன் ஹெலியில் போக­லாமே' என்று அவர் என்­னி­டத்தில் கேட்டார். 'வாருங்கள் வாருங்கள் ஹெலியில் போகலாம்' என்றார். அஷ்ரப். அப்­போது நான் அவ­ரி­டத்தில் சொன்னேன் 'சேர். 72 மணி நேர­மாக தூங்­காமல் இருக்­கின்றேன். நான் காரில் மரு­தா­னைக்குப் போய் எனது சிறிய அறையில் சற்றுத் தூங்கி ஓய்­வெ­டுத்­து­விட்டு மட்­ட­க­்களப்­புக்கு போகின்றேன்' என்று அவ­ரி­டத்தில் குறிப்­பிட்டேன்.

அதற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் தலைவர் அஷ்ரப்  தேர்தல் வேலை­க­ளுக்கு வைத்துக் கொள்­ளு­மாறு மூன்று இலட்சம் ரூபாவை எனக்குத் தந்­தி­ருந்தார். 

சம்­பவம் அன்று நான் மன்­னம்­பி­ட்டியால் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்று கொண்­டி­ருந்­த­போது வானொலி செய்­தியில் தலைவர் அஷ்ரப் விபத்தில் சிக்கி இருக்­கின்றார் என்று தெரிந்து கொண்டேன். உடனே காரைத் திருப்­பிக்­கொண்டு மீண்டும் வந்தேன். என்­னிடம் சாவி கொடுத்­ததை நினைவில் வைத்துக் கொண்டு கட்­சியில் என்­னதான் பிரச்­சி­னைகள் இருந்­தாலும் 2015 வரை அதனைப் பாது­காத்து வந்தேன்; ஹக்கீம் யாப்பை மாற்­றும்­வரை.

அமைச்சர் ஹக்கீம் மு.கா. யாப்பை மாற்­றிய முறை பிழையா? 

இப்­போது மு.கா.  ஹக்கீம் சொத்­தாகி விட்­டது. அஷ்ரப் காலத்தில் கட்­சியில் கருத்துச் சுதந்­திரம் இருந்­தது. இப்­போது முசோ­லி­னி­யு­டைய ஏகா­தி­பத்­தியம் கட்­சியில் நடக்­கின்­றது. என்­றாலும் இப்­போதும் நான் மு.கா. அங்­கத்­தவன். 

அந்த நாட்­களில் இப்­படி ஒரு கதை இருக்­கின்­றது. முன்­னைய நாள் அம்­பாறை போக இருந்த அஷ்ரப் அடுத்­தநாள் தான் இந்தப் பய­ணத்­தை மேற்கொண்டார் என்று? 

ஆம் அந்தக் கதை உண்­மை­யா­னது. 15ஆம் திகதி அங்கு போவ­தற்கு ஹெலி கூட வந்­தி­ருந்த நிலை­யில்தான் பயணம் ரத்­தா­னது.  
அந்த நாட்­களில் தலைவர் அஷ்ரப் ஒரு குழப்­ப­மான நிலையில் இருந்தார். சந்­தி­ரி­கா­வுக்கு 18  பக்­கங்­களைக் கொண்ட கடி­த­மொன்­றையும் எழுதி இருந்தார். இத­னால்தான் அந்த ஹெலி பயணம் ஒருநாள் தாம­த­மா­னது.

அந்தக் குழப்­ப­மான அர­சியல் நிலை பற்றி தலைவர் அஷ்ரப் உங்­க­ளி­டத்தில் ஏதா­வது பேசி இருந்­தாரா?

ஆம், சில விட­யங்­களை இந்த சம்­ப­வத்­திற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் அவர் என்­னி­டத்தில் கூறினார். அது அன்று எனக்கு பணம் கொடுத்த நேரம். இந்தத் தேர்­தலில் எமக்கு 10- - 12வரை  ஆச­னங்கள் கிடைக்கும். அவர் சொன்­ன­படி 11 ஆச­னங்கள் கிடைத்­தன. அன்று அவர் சொன்ன விட­யங்கள் எனக்கு நன்­றாக நினைவில் இருக்­கின்­றது.  

இந்தத் தேர்­தலை வெற்றி கொண்­டதும் நான் மக்­கா­வுக்குப் போய்­வி­டுவேன். நான் வரும் வரை நீங்கள் ஆளும் தரப்பில் போய் அமர்ந்து விடா­தீர்கள் எதி­ர­ணியில் போய் அமர்ந்து கொள்­ளுங்கள்.  நீங்கள் ஏதும் பேசாமல் அங்கு அமை­தி­யாக இருங்கள். 

நான் நாட்­டுக்கு வந்­ததும் சந்­தி­ரிகா என்­னி­டத்தில் கூறுவார் அஷ்­ர­புடன் சேர்ந்து அர­சாங்­கத்தை அமைப்போம் என்று. அதுவரை இருங்கள்.  அமைச்சுக்களைப் பொறுப்பேற்காமல் தேவைக்கு ஏற்றவாறு மட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அஷ்ரப் குறிப்பிட்டார்.

அந்த திட்டம் நிறைவேறவில்லை?

ஆம். அதற்கு முன்னர் விபத்து நிகழ்ந்து விட்டது.

அஷ்ரப் வகுத்த திட்டத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லையே?

ஆம், அதற்காக இன்றும் மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கின்றது. நாம் போய் ஆளும் தரப்பில் உடனே அமர்ந்து கொண்டோம். பேரியல், ஹக்கீம் அமைச்சுக்களை எடுத்துக் கொண்டார்கள். எவரும் அஷ்ரப் பேச்சை மதிக்கவில்லை.

No comments

Powered by Blogger.