Header Ads



ஐ.தே.க.யிலிருந்து ரவி விரட்டப்படுவாரா..?

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பாரதூரமான பல குற்றச்சாட்டுக்கள் வெளியானால், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நலன்கருதி அவரை செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது குறித்து கட்சிக்குள் விரிவான கலந்துரையாடல்கள் நடப்பதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அடுத்த மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கை கையளிக்கப்படும்.

அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோர் சம்பந்தமாக கடுமையான பரிந்துரைகள் முன்வைக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் சட்ட வல்லுனர்கள் இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிடம் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக செயற்படுவது கட்சியின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியின் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தொகுதி மட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சருக்கு வழங்குவது குறித்து மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறும் அப்படியில்லை எனில் எதிர் தரப்புக்கு ஆயுதம் ஒன்று கிடைத்தது போல் அமைந்து விடும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலர் இது குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சிறிகொத்தவின் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விடயம் சம்பந்தமாக கட்சியின் தலைமை இதுவரை இறுதி முடிவுகளை எடுக்கவில்லை என்றாலும் துரிதமாக இது குறித்து கவனத்தை செலுத்தும் எனவும் சிறிகொத்தவின் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது.

பதவிக்காலத்தை மேலும் நீடிக்கும் தேவை ஏற்படாது என ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்திரசிறி கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனடிப்படையில், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இதன் பின்னர் சட்டமா அதிபர் அறிக்கையை ஆராய்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.