Header Ads



ரோஹிங்கியர்களை வேறு நாடொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் காரணம் காட்டி பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை வேறு நாடொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ரோஹிங்கிய அகதிகள் அதிகாரிகளுடன் உரையாடியபோது அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்ததாக தெரிவித்தார்.

எனினும் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் உலகில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவ்விடயத்தை நினைத்த மாத்திரத்தில் செய்து விட முடியாத போதும் இலங்கையில் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் காரணம் காட்டி இவ்விடயத்தை துரிதப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி சிராக்ஷ் நூர்தீன் குறிப்பிட்டார்.

கல்கிஸ்சை பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளான 31 ரோஹிங்கியா அகதிகளும் பாதுகாப்பின் நிமித்தம் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என்றபோதும் இவர்களை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்பான நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் அவர்கள் இலங்கைக்கான ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ், பூசா முகாமில் பாதுகாப்பாக வைக்கப்படுவரென்றும் இலங்கைக்கான ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் இலங்கைக்குள் வந்த வேறு நாட்டின் அகதிகள் ஐந்து தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.