October 15, 2017

வடக்கு - கிழக்கு இணையப்போவது போன்ற, பீதியை கிழப்பத் தேவையில்லை - ஹக்கீம்

“வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து எழுதிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை கிழப்ப வேண்டாம்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

காத்தான்குடி கடற்கரையிலுள்ள பிஸ்மி வரவேற்பு மண்டபத்தில் இன்று (15) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கோரினார். இந்த ஒன்றுகூடலில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு விடயத்தை வைத்து பீதியை உருவாக்குவதற்குச் சிலர் இதனை மூலதனமாகப் பாவிக்கின்றனர்.

“சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலைதான் அரசியலாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றுத்தீர்வாக வட, கிழக்கு இணைப்புத் தொடர்பாகக் கூறியுள்ளதை அதில் தெரிவித்துள்ளார்கள். அது தமிழ் மக்களின் அபிலாசையாகும்.

“வட, கிழக்கு இணைப்பு பிரிப்பு பற்றி முஸ்லிம் காங்கிரஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால், நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்கின்றோம் என்பதாகக் காட்டத்தேவையுமில்லை.

“நாங்கள் முஸ்லிம்கள், நடு நிலையானவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

“நாட்டின் சில அரசியல் சட்ட ஏற்பாடுகளைப் பற்றி நாங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

“ஒரு மாகாணம், இன்னொரு மாகாணத்துடன் இணைவதால் அந்த மாகாணத்திலுள்ள மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமல் செய்ய முடியாது. அதேபோன்று, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் மாகாணங்கள் இணைய முடியாது. இது அரசியல் யாப்பிலே அப்படியே இருக்கின்றது.

“இது இருக்கத்தக்கதாக இன்றைக்கு நாளைக்கு வடக்கு, கிழக்கு இணையப்போவது போன்று கதைத்து ஒரு பீதியையும் அச்சத்தையும் கிழப்பத் தேவையில்லை.

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் காலத்தில் இருந்து பேணி வருகின்றோம்.

“இம்மாகாணங்கள் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்குத் தனிமாகாணம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் கோரிக்கையும் கொள்கையுகும். அதிலிருந்து நாங்கள் மாறவில்லை.

“வட, கிழக்கு இணைவுக்கு சட்டமும் அரசியல் யாப்பும் மிகத் தெளிவாக சட்டத்தைச் சொல்கின்றன. இதன் யாதார்த்தம், எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த விடயம். இதை வைத்துக்கொண்டு, சிலர் எழுதிக் கொடுப்போகின்றார்கள் என்று கூறுகின்றனர்.

“இந்த வியடம் முஸ்லிம்களின் சம்மதில்லாமல் இது சாத்தியமில்லை என்பதும் தமிழ் தலைமைகளுக்கு நன்கு தெரியும்.

“இப்போது இணைப்பு பிரிப்பு பற்றிக் கதைப்பது ஒரு தேவையற்ற விடயமாக நான் பார்க்கின்றேன்” என்றார்.

3 கருத்துரைகள்:

தலைவா சாணக்கியனே!
உங்களது வாய்ப்பேச்சும் வக்கற்ற வழியற்ற தன்மையையும் நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
தலைவா எங்களை வைத்து கீழ்க்கை நீட்டி பெற்றுக்கொள்ளும் சம்பாத்தியம் ...... ? .வேண்டாம் தலைவா. சமுகத்தை விட்டுவிடு தலைவா.

என்ன பரமா பயத்த காட்டிட்டாங்களா? போன வாட்டி ஜனாதிபதித் தேர்தல்ல மஹிந்தவோட எச்சிலுக்கு எங்களை விற்கப் பார்த்தே, நடக்கல. இப்போ தமிழ் தரப்பு பேண்டத தின்ன ஆசைப் பட்ட எங்களை விற்க பார்த்தே, நாங்க உசார்ந்னதும் தமிழ் தரப்புக்கு அல்வா கொடுக்குரியா? என்ன இருந்தாலும் உன் எச்சில் புட்டி போகலியே......!

உஷ;......... உஷ;......... யாருமே வடகிழக்கு இணைப்புப்பற்றி கதைக்க வேண்டாம். ஏன்னா தலைவர் சானாக்கியன் டீலை முடிச்சிட்டாறு, இனி சட்டத்தில் உள்ள சிக்கல் மட்டும்தான். அது கிழியர். நாம இப்ப முஸ்லிம் தனிஅலகு என்கிற கதை ஒன்று இருக்கு, அதை மட்டும் வாய்மூடாம கேட்டுக் கொண்டிருந்தா சரி. இனி முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் நிறைவேற்றப்படாத தீர்மானங்களின் பட்டியலில் 'முஸ்லிம் தனிஅலகு' கோரிக்கை. அல்லாஹூ அக்பர் என்று கோசம் வேற. என்னமா காதுல பூ சுத்துராரு நமது தலைவர், அவரை விட சானாக்கியர் இல்லப்பா.

Post a Comment