Header Ads



கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை, சொந்த மாகாணங்களில் நியமியுங்கள் - ரிஷாட்


தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களை மீள்பரிசீலனை செய்து, அந்த ஆசிரியர்களுக்கு சொந்தமான  மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் எழுத்து மூலமும் கடிதமொன்றையும் கையளித்தார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் வதியும் மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணங்களுக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை நியமித்துள்ளமையை உடனடியாக இரத்துச் செய்து, அந்தந்த மாகாணங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதெனவும், ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு பயணம் செய்வதிலேயே காலம் கழியும் எனவும் பல்வேறு போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படும் எனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்குப் பரிச்சயமான சூழலில் கல்வி கற்பிப்பது, அவர்களுக்கு வசதியானது. எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதன் மூலம் மாணவர்களுக்கும் உச்ச பலன் கிடைக்கும் என அமைச்சர் அகிலவிராஜிடம் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, இதனைக் கருத்திற்கு எடுத்து, ஆசிரியர்களுக்கு சொந்தமான மாகாணங்களில் அவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் மேலும் கோரியுள்ளார்.

இது தொடர்பில்  ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் தாம் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.