Header Ads



கொழும்பு - தூத்துக்குடி மீண்டும், பயணிகள் கப்பல்சேவை ஆரம்பிக்க ஒப்புதல்


கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த சேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

இலங்கை - இந்திய சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஏற்கனவே மும்பையை சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை 2011 ஜுன் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு பயணிகள், கப்பல் பயணத்தில் நாட்டம் கொள்ளாத நிலையில் அதே ஆண்டு நவம்பர் 18ம் திகதியுடன் சேவை நிறுத்தப்பட்டது.

குறித்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவே அமைச்சர் மகிந்த சமரசிங்க அமைச்சரவையில் அது தொடர்பான ஆவணங்களை முன்வைத்திருந்தார்.

"இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை இரு மக்களுக்கிடையில் நெருக்கான தொடர்பினையும் கலாச்சார மற்றும் பொருளாதார தொடர்புகளையும் மேம்படுத்துவதற்கு உதவுவதோடு இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் வர்த்தகம் , சுற்றுலா மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் சந்தர்ப்பத்தை வழங்கும்," என அமைச்சர் மகிந்த சமரசிங்க தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கின்றார்.

" இந்த நோக்கத்தின் அடிப்படையில் கொழும்பு - இராமேஸ்வரம பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க கேள்வி மனுவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதிலும் அது தொடர்பில் உரிய பெறுபேறுகள் கிடைக்கவில்லை" என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவரது அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை உத்தேச திட்டத்திற்கு தற்போதுள்ள கேள்வி மனு நடைமுறைகளை ரத்து செய்துவிட்டு புதிதாக கேள்வி கோரப்பட்டு புதிய ஒருவரை நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த சேவை தொடர்பாக இலங்கை - இந்திய அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.