Header Ads



பனீ இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்ட வரலாறு

-ரஹ்மத் ராஜகுமாரன்-      

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் கிறிஸ்தவ மதம் தோன்றவே இல்லை . நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பனீ இஸ்ரவேலர்களுக்காக வந்த நபி என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

''மர்யமுடைய மகன் ஈஸாவே.. உங்களுடைய இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' (குர்ஆன் 5 : 112)

என்று "நெருங்கிய நண்பர்கள்" என்பதை குறிக்க மூலச் சொல்லில் "அல் ஹவாரிய்யூன்" எனும் சொல் பயன்படுததப்படுகிறது.

இப்படி கேட்க,  '' இவ்வாறெல்லாம் கேட்காதீர்கள்;   அப்படிக் கேட்டால் அதுவே உங்களுக்கு ஒரு சோதனையாக மாறிவிடலாம். எனவே, நீங்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்றால் வாழ்வாதாரத்தைத் தேடும் முயற்சியில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்" என்று நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

"அதற்கவர்கள் அதிலிருந்து நாங்கள் புசித்து எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும். அன்றி நீங்கள் (உங்களுடைய தூதுவத்தைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். (குர்ஆன் 5 : 113)

அவர்களே வாங்கிக் கட்டிக் கொண்ட சோதனை. விதி யாரை விட்டது?

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குளித்து, உலுச் செய்து. கம்பளி உடையணிந்து, இரண்டு ரக்கஅத்துதொழுது, தலைகவிழ்ந்திருந்து முஷாஹதாச் செய்து துஆக் கேட்டார்கள்.

உடனே அவரது சமூகத்தார் பார்த்திருக்க... இரண்டு மேகங்கிடையே சிவப்பு நிறமுள்ள ஒரு ஸுப்ரா (உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டுள்ள தட்டு) வானில் இருந்து இறங்கியது.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த தட்டை மூடியிருந்த துணியை "பிஸ்மில்லாஹி கைரிர் ராஜ்க்கீன்" என்று சொல்லி திறந்தார்கள். அதில் ஏழு ரொட்டிகளும், ஏழு மீன்களும் இருந்தன. (நூல் : தஃப்ஸீர் தபரீ, இப்னு அபீ ஹாத்திம்)

அந்த தட்டில் ஒரு மீன் இருந்தது அதில் எவ்வித முள்ளுமில்லை. செதிலுமில்லை.   கொளுப்பு வடிந்து கொண்டிருந்தது. அம்மீனின் தலையில் உப்பும், வாலில் சிர்க்காவும் (காடி), அதனைச் சுற்றிப் பலவிதமான கீரைகளும் வைக்கப்பட்டிருந்தன.

அந்த தட்டில் ஒரு மீனும், 5 ரொட்டிகளும் இருந்தன. ஒரு ரொட்டில் ஜைத்தூன் எண்ணெய்யும், ஒன்றில் தேனும், மற்றொன்றில் நெய்யும், இன்னொன்றில் திரட்டுப்பாலும், மற்றொன்றில் சுட்ட இறைச்சியும் இருந்தன.


இப்படி பல கிதாபுகளில் காணக்கிடக்கிறது

அல்மாயிதா உணவுத் தட்டு

ஹவாரிய்யூன்களுக்கு தலைவரான ஷம்ஊன் என்பவர், நபியவர்களிடத்தில் "இது இம்மையிலுள்ள உணவுப் பதார்த்தங்களைச் சேர்ந்ததா? அல்லது மறுமையிலுள்ள உணவுப் பதார்த்தங்களைச் சேர்ந்ததா? என்று கேட்டார்.

அதற்கு நபி  அவர்கள். "அங்குள்ளதும் அல்ல; இங்குள்ளதும் அல்ல. அல்லாஹ் நூதனமாக உண்டாக்கினான்" என்று கூறி, உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.

அதற்கு அவர்கள், 'இந்த உணவில் நீங்களும் ஓர் அத்தாட்சி காண்பிக்க வேண்டும்" என்றனர்.

அதற்கு, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அம்மீனை நோக்கி, "அல்லாஹ்வின் உத்தரவுப்படி நீ உயிர் பெற்று எழு" என்றார்கள்.

உடனே அம்மீன் உயிர் பெற்று துளும் பிற்று. மீண்டும் அதனை நோக்கி, "நீ உயிரில்லாமல் ஆகிவிடு" என்றார்கள். உடனே அந்த மீன் முன் போல் சுடப்பட்ட மீனாகி விட்டது.

அந்த உணவுத் தட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தது. அதிலிருந்து உணவு உண்ண பிரியமுள்ளவர்கள் எல்லாம் உண்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உண்ண மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிலிருந்து எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவிடப்பட்டிருந்தது.

ஒவ்வொருவரும் சாப்பிட சாப்பிட உணவு குறையாமல் அப்படியே அந்தத் தட்டில் உணவு இருந்து கொண்டே இருந்தது.

நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் உணவை திருடி பத்திரப்படுத்த ஆரம்பித்தார்கள் பனீ இஸ்ரவேலர்கள்.

மறுநாள் திருடிய உணவை சாப்பிட்டு இரவில் படுத்து எழுந்திருக்கும் போது குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருவம் மாற்றபட்டனர்.

இவ்வாறு உருவம் மாற்றப்பட்டவர்கள் மொத்தம் 5000 பேர்கள் என்றும் அவர்கள் எல்லோரும் பாதைகளிலும், குப்பை மேடுகளிலும் பன்றிகளைப் போல் மலத்தை தின்று கொண்டிருந்தனர்.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டவுடன் சுற்றிச் சுற்றி அழுது கொண்டிருந்தனர், இவ்வாறு மூன்று நாட்கள் வரை இருந்து அத்தனை பேரும் மரணித்தனர்.

இந்த சம்பவம் குறித்து புதிய ஏற்பாடான பைபிளில் எங்குமே காணப்படவில்லை. இப்படிக்கு சம்பவம் குறித்து திருக்குர்ஆன் ஒரு அத்தியாயத்தை (அல்மாயிதா - உணவுத் தட்டு 5 வது அத்தியாயம்) இறக்கியருளப்பட்டிருக்கிறது. .இந்த சம்பவத்தை குர்ஆனிலிருந்தே கிறிஸ்துவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதிலிருந்து இறுதி இறை வேதமான குர்ஆன் உண்மைகள் எதையும் மறைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

- ரஹ்மத் ராஜகுமாரன்

No comments

Powered by Blogger.