Header Ads



மேஜர் அஜித் பிரசன்னவின் விளக்கம், இனவாதிகளை காப்பாற்றும் திட்டமா..?

கல்கிசை பிரதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரி முன்னாள் பொலிஸ் ​கொன்ஸ்டபிள் என்ற உண்மை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

பொலிஸ் ​கொன்ஸ்டபிள் ஒருவர் ரோஹிங்கியா அகதிப் பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியமையால் இடம்பெற்ற தனிப்பட்ட விவகாரமே இன்று நாட்டிலுள்ள இரு இனங்களுக்கிடையில் பாரிய கலக நிலையை உருவாக்குமளவுக்கு பூதகரமாக உருவெடுத்திருப்பதாக "தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள்" அமைப்பு பகிரங்கப்படுத்தியுள்ளது.

முன்னாள் பொலிஸ் ​கொன்ஸ்டபிள் தன் மீது ஏற்பட்ட களங்கத்தை மறைப்பதற்கும் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கான சாட்சியங்களை இல்லாதொழிப்பதற்குமாக தனது குடும்பத்தாருடன் இணைந்து முன்னெடுத்த மாபெரும் சூழ்ச்சியே அண்மையில் கல்கிசையில் தங்கியிருந்த ரோஹிங்கியா அகதிகளை நெருக்குதலுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

உண்மை வெளிச்சத்துக்கு வராததன் காரணமாகவே போலிப் பிரச்சாரங்களைக் கேட்டு சிங்கள பெளத்தர்கள் ரோஹிங்கியா அகதிகள் மீது ஆவேசம் கொண்டனர். 

மியன்மாரில் பெளத்தர்களுக்கும் ரோஹிங்கியா மக்களுக்குமிடையில் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பிலும் பெரும் எண்ணிக்கையானோர் கொலை செய்யப்பட்டனர். 

இதனைக் காரணம் காட்டி இலங்கையில் தங்கியிருந்த ரோஹிங்கியா அகதிகளையும் தீவிரவாதிகளென அடையாளப்படுத்துவதற்கான திட்டம் பிரதான சூத்திரதாரியான முன்னாள் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் அவரது குடும்பத்தாராலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது" என "தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள்" அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

மியன்மாரிலிருந்து ரோஹிங்கியா மக்கள் இலங்கைக்குள் எவ்வாறு? ஏன்? வந்தார்கள் என்பது பற்றிய தெளிவான விளக்கம் நாட்டு மக்களிடையே இருக்கவில்லை. 

இந்நிலையில் சூழ்ச்சியாளர்கள் இச்சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி, பெளத்தர்களை கொலை செய்யும் தீவிரவாதிகளே கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அடிப்படைவாதிகளை தூண்டி விட்டனர்.

உண்மை, பின்புலம் அறியாத அடிப்படைவாதிகளும் நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான விரோதத்தை வெளிப்படுத்த இதனை சிறந்த சாதகமாக்கிக் கொண்டனர். 

ஆனால் உண்மையில் கல்கிசை பகுதியிலிருந்து விரட்டப்பட்ட ​ரோஹிங்கியா மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கும் தீவிரவாதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்றும் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.


உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் "தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள்" அமைப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி ​ரோஹிங்கிய மக்கள் நாட்டுக்குள் வந்தது முதல் இதுவரை அவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளித்திருந்தது.

இதன்போது அமைப்பின் அழைப்பாளர் விளக்கமளித்ததாவது-

மியன்மாரில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு சிறு குழுவினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்று அங்கே 06 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக படகில் செல்லும்போதே ஏதோவொரு காரணத்தினால் இலங்கை கடல் எல்லையை அத்துமீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் இவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மிரிஹானையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டவிதிகளை மீறுவோர் தடுப்புக்காவல் வைக்கப்படும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இக்காலகட்டத்தில் மிரிஹானை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் டி.என்.ஜே.டி வாஸ் குணசேகர என்பவர் அங்கே தங்கியிருந்த ரோஹிங்கிய பெண்ணொருவரை முகாமிலிருந்து வெளியே அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். 

இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பெண் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுபற்றிய வழக்கு கங்கொடவில நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

நீதவானின் உத்தரவுக்கமைய சந்தேக நபர் பொலிஸ் கொன்ஸ்டபிள் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியே அழைத்துச் செல்வதற்கு உதவிய மிரிஹானை தடுப்பு முகாமில் வேலை செய்யும் றிசானா எனும் இலங்கைப் பெண்ணும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனரான அமீன் என்பவருமே இவ்வழக்கில் சாட்சியாளர்களாவர். 

ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் தங்கியிருந்ததனால் ஓரளவு ஹிந்தி மொழியை பேசியதாகவும் றிசானா என்ற பெண்ணுக்கு ஹிந்தி மொழி தெரியுமென்பதனால் அவரே இச்சம்பவத்துக்கு உதவியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அஜித் பிரசன்ன, நீதிமன்றம் இதுவரை றிசானா என்ற பெண்ணை கைது செய்யவில்லையென்றும் தெரிவித்தார்.

வழக்கின் இடைநடுவே கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கொன்ஸ்டபிள், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் பிணையிலுள்ள காலப்பகுதியிலேயே திட்டமிடப்பட்ட முறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென்றும் இதற்காக அவருடன் நெருக்கமான சில பொலிஸார் உதவி செய்திருப்பதாகவும் சட்டத்தரணி மேலும் குற்றம்சாட்டினார்.

ரோஹிங்கியா மக்கள் கல்கிசையில் இருப்பது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென பொலிஸார் சம்பவ தினத்தன்று கூறியதனை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

இதனால் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுத்து உண்மையான சூத்திரதாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டதும் மறைக்கப்பட்டதுமே பாரிய அசம்பாவிதங்களுக்கு காரணமாகியுள்ளமையால், இதுவரை நடந்தது என்ன என்பதனை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

இல்லையேல் தவறான கருத்துக்களும் எண்ணங்களும் மேலும் மோசமானதொரு நிலையை நாட்டில் உருவாக்கும் என்பதே அந்த அமைப்பின் பொதுவான கருத்தாக காணப்படுகிறது.

2 comments:

  1. Do not trust anyone. Simple as that. We Muslims get fooled too quickly.
    All of them are same coin with two different sides.

    ReplyDelete
  2. Don´t trust this person 100%.

    ReplyDelete

Powered by Blogger.