Header Ads



கிழக்கை, வடக்குடன் இணைக்க கேட்பது, யுத்தத்தைவிட கொடுமையானது - ரஸ்மின்

கிழக்கின் சுய நிர்ணயத்தை விட்டுக்கொடுத்து மீண்டும் ஒரு அடிமை வாழ்வை நோக்கி கிழக்கு மக்கள் தள்ளப்படுவதை ஒரு போதும் கிழக்கு முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடக்கு மக்களுக்கு வடக்கு எந்தளவு தேவையோ அதை விட கிழக்கு முஸ்லிம்களுக்கும் கிழக்கு தனித்திருப்பது அவசியமானதாகும். தனித்த தமிழ் மாகாணம் என்பதை விட தம்மைத் தாமே ஆளும் நிலையே என்றும் அவசியமானது என ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc தெரிவித்தார். 

ஏராவூரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஸ்மின் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மக்கள், வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் அதனாலேயே வடகிழக்கு இணைப்பை கோருகிறோம். தனித்த தமிழ் மாகாணம் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவை என்று த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே ரஸ்மின் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சுமந்திரனதும், த.தே.கூ வின் தேவைக்காகவும் தான் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஆகியவற்றை தாம் கொண்டுவர முயற்சிப்பதாகவும், வேறு யாருடைய தேவைக்கும் தாம் இதற்க்கான முயற்சிகளை செய்ய வில்லை என்றும் சுமந்திரன் கூறுகிறார். 

சுமந்திரனின் கூற்றை நினைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெட்க்கப்பட வேண்டாமா? 

எதிர்கட்சியில் இருக்கும் சுமந்திரனுக்கும், சம்பந்தன் ஐயாவுக்கும் தமது மக்களுக்கு தேவையானதை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஆகியவற்றில் கொண்டுவர முடியுமென்றால் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் கட்சியிலேயே அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஏன் தமது சமுதாயத்திற்க்கு தேவையானதை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது? 

யுத்தத்தினால் முஸ்லிம்கள் இழந்ததையே இன்னும் பாதி கூட மீட்டுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் கால்வாசியினர் கூட இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வில்லை. முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்க்கு 5% கூட உதவாத வடக்கு தமிழ் தலைமைகள் தான் கிழக்க்கையும் இணைத்து முஸ்லிம்களுக்கு தீர்வு தரப்போகிறார்களா? என்றும் குறித்த நிகழ்வில் SLTJ தலைவர் கேள்வியெழுப்பினார். 

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கும் இதன் போது தவ்ஹீத் ஜமாத் தலைவர் பதிலளித்தார்.

வடகிழக்கு இணைப்பில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நிற்காது என்றும் வடகிழக்கு இணைக்கப்பட்டால் அஷ்ரப் கோரிய முஸ்லிம் அலகை கோருவோம் என்றும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்களும் முஸ்லிம்களைப் போல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் தலைவர்கள் செய்த வரலாற்று தவறுகள் தமிழ் மக்களை நிம்மதியிழக்க செய்துள்ளது. அதற்க்காக, எமது உரிமைகளை ஒருக்காலும் விட்டுக்கொடுக்கவும் முடியாது. 

கிழக்கை வடக்குடன் இணைப்பது தான் தமிழ் மக்களுக்காக உரிமை வழங்குவது என்று யார் முடிவெடுத்தார்? 

தமிழ் மக்களின் உரிமை அவர்களுக்கு எந்தளவு முக்கியமோ, அதே போல் முஸ்லிம்களின் உரிமைகளும், கடமைகளும் முஸ்லிம்களுக்கும் முக்கியமானது. 

தமிழ் தலைவர்களின் விருப்பம் வடக்குடன் கிழக்கு இணைய வேண்டுமென்பதற்க்காக, இணைய கூடாது என்றிருக்கும் முஸ்லிம்களின் மனோ நிலையை தமிழ் தலைவர்கள் ஏற்க்க மறுப்பது யுத்தத்தை விடவும் கொடுமையானதாகும்.

மு.க தலைவரின் ஏமாற்று அரசியல் நாடகத்தினால் நாம் இழந்தது போதும் இனியும் இழக்க ஒன்றுமில்லை, இருப்பது கிழக்கு ஒன்று தான் இதனையும் விட்டுக்கொடுத்தால் நமக்காக குரல் எழுப்ப ஒரு மாகாண சபை கூட இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மஹிந்தவின் காலத்தில் எத்தனை அனியாயங்கள் நடந்தது அவற்றுக்கான தீர்வுகள் கிடைத்ததா? தம்புள்ளை பள்ளிக்க் தீர்வு கிடைத்ததா?  மாயக்கல்லி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா?  வில்பத்து மக்களுக்கு தீர்வு கிடைத்ததா?  அளுத்கமை கலவரக்காரர்களுக்கு தண்டனை கிடைத்ததா? கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடாவது கிடைத்ததா? 

மஹிந்தவின் ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் இப்போதைய மைத்ரி ஆட்சியிலும் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிவுக்கு வரவில்லை.

இன்றும் பள்ளிகள் உடைக்கப்படுகிறது, உரிமைகள் பரிக்கப்படுகிறது. கடைகள் எரிக்கப்படுகிறது. எத்தனையோ தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனைப் பற்றியெல்லாம் வாய் திறக்காத மு.க தலைவர் தற்போது தமிழ் மக்களின் கோரிக்கையின் நியாயம் தேடுகிறார்.

தமிழ் மக்களின் கோரிக்கைக்கு குறுக்கே நிற்க மாட்டேன் என்று இன்றைக்கு பேசும் மு.க தலைவர் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மு.க வை விட பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற நிலையில் மு.க வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம், முஸ்லிம் முதலமைச்சை தருகிறோம், மாகாண அமைச்சுப் பதவிகள் அனைத்தையும் தருகிறோம். என்றெல்லாம் கூறிய நிலையில் த.தே.கூ வுடன் இணைந்து ஆட்சி அமைத்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிகோலியிருக்கலாமே? 


அதனை செய்யாது மஹிந்தவின் கட்சியோடு கூட்டணி அமைத்தது ஏன்? தமிழ் மக்கள் பற்றி இன்றைக்கு பேசும் ஹக்கீம் அவர்களுக்கு அன்று ஏன் இவற்றை செய்ய முடியாமல் போனது? 

காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றால் போல் கருத்து சொல்லி மக்களை ஏமாற்றி காய் நகர்த்தும் மு.க தலைவரின் இந்த பாணியை பற்றி புரிந்தும் புரியாத சில மு.க மாகாண சபை உறுப்பினர்கள் தலைவரின் சாணக்யம் என்று இதனை பேசி வருவது தான் உலக மகா நகைச்சுவையாகும். 

கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் இத்தனை கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் போதெல்லாம் வாய்திறக்காதவர் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது வேடிக்கையானது. 

நீர்வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி ஆகிய இரண்டு அமைச்சுகள் மு.க தலைவரின் கையில் இருந்ததே, நகர அபிவிருத்தியின் கீழ்  தம்பிள்ளை பள்ளிக்கு மிகத் தெளிவான தீர்வை பெற்றிருக்கலாமே? 

கடை வரை அப்படியானதொரு தீர்வை நோக்கி துளியளவு கூட நீங்கள் நகர வில்லையே? இப்போது நகர அபிவிருத்தி அமைச்சு ஷம்பிக்க ரனவக்கவின் கையில் இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? 

மு.க வின் தலைவர் தன்னை த.தே.கூட்டமைப்பின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு கருத்து வெளியிடுகிறார். அமைச்சர் ஹக்கீமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அவர் மு.க தலைவர் தான் என்பதை அடிக்கடி அவருக்கு நினைவூட்டுங்கள். 

இணைந்திருந்த வடகிழக்கில் வேறு வழியில்லை என்பதினால் முஸ்லிம் அலகு அப்போது தேவைப்பட்டது. இப்போது வட கிழக்கே பிரிந்து இருக்கும் நிலையில் கிழக்கு என்ற மிகப்பெரும் மாகாணத்தை விட்டுக்கொடுத்து விட்டு நிலத்தொடர்பு அற்ற முஸ்லிம் அலகை கேட்பதில் என்ன அறிவுடைமை இருக்கிறது? புத்திசாலிகள் இப்படித்தான் யோசிப்பார்களா?

இன்னும் சொல்லப் போனால் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் தனி அலகு கேட்ட பிற்பட்ட காலத்தில் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர் குழுவினருக்கும் அஷ்ரப் அவர்களும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு கொழும்பு துறைமுக விடுதியில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் அடுத்த நாள் பத்திரிக்கையில் “முஸ்லிம் தனி அலகு” கோரிக்கையை தான் மீள்பரிசீலனை செய்வதாக அஷ்ரப் அறிவித்தாரே இது ஏன் தற்போதைய மு.க தலைவருக்கு தெரிய வில்லை?

அஷ்ரப் அவர்களே மீள்பரிசீலனை செய்வேன் என்ற ஒன்றை, அதுவும் இணைந்த வடகிழக்கில் கேட்டதை தற்போது பிரிந்த வடகிழக்கில் கேட்பது எந்த வகை அறிவாகுமோ? 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நினைத்ததை முஸ்லிம்கள் விஷயத்தில் முடிவெடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம். 

அரசியலைப் பற்றியும் அரசியல் வாதிகள் சானக்யம் என்ற பெயரில் மக்களை எமாற்றும் முறைகள் பற்றியும் மக்கள் விளிப்படைந்து விட்டார்கள். 

புதிய அரசியல் யாப்பில் வடகிழக்கு இணைப்பு, பாராளுமன்றத்திற்கான புதிய தேர்தல் (கலப்பு) முறை போன்றவை வரவிருக்கிறது. ஏற்க்கனவே உள்ளூராட்சி, மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அனியாயம் இழைக்கப்பட்டது. தொடர்ந்தும் அனியாயம் இழைக்கப்பட்டால் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. என்றார் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் அவர்கள்.

குறித்த உரையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இளைக்கப்பட்ட அனியாயம் மற்றும் வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்கியுள்ள விபரங்கள் போன்றவை பற்றியெல்லாம் சுமார் இரண்டு மணி நேரங்கள் விரிவாக மக்களுக்கு விளக்கப்பட்டது.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட முடிவில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் தங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது .எனவே அவசரமாக முஸ்லிம்காங்கிரஸ் தலைமையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் .

    ReplyDelete
  3. உண்மையில் தமிழ் முஸ்லிம் பிளவை உறுவாக்கி அதை பூதகாரப்படுத்தி தமது சித்து விளையாட்டை காட்டி பெரும்பான்மையினர் அரசியல் ஆதாயம் காண முயற்ச்சிக்கிறார்கள் அதற்கு இருசாரரரும் பலியாகிடாமல் முண்னெச்சரிக்கையுடண் நடந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.