Header Ads



பயணிகளின் உயிரை காப்பாற்ற, உயிர் துறந்த சாரதி - ஹப்புத்தளையில் சம்பவம்

பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரை காப்பாற்ற சாரதி ஒருவர் உயிர் துறந்த இரண்டாவது சந்தர்ப்பம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

தான் ஓட்டிய பேருந்து பாதையை விட்டு விலகியமையினால் அதில் பயணித்த பயணிகளை காப்பாற்றுவதற்காக சாரதி ஒருவர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

பண்டாரவளை போக்குவரத்து சபையில் சேவை செய்த எச்.எம்.கீர்த்தி பண்டார என்பவரே இந்த தியாகத்தை செய்துள்ளார்.

ஊவா கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த அவர் 2009ஆம் ஆண்டும் பண்டாரவளை போக்குவரத்து சபையில் சேவையில் இணைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான பண்டாரவளை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 63-0581 என்ற பேருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் பண்டாரவளையில் இருந்து சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த பேருந்து ஹப்புத்தளை - பெரகல பிரதேசத்தின் விஹாரகல வீதியில் வைத்து வீதியை விட்டு விலகியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் சுமார் 35 - 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

பேருந்தின் பிரேக் செயற்படாமையினால் பாரிய பள்ளம் ஒன்றில் பேருந்து விழும் நிலைக்கு சென்றுள்ளது. இதன்போது உடனடியாக செயற்பட்ட சாரதி பேருந்து பள்ளத்தில் விழாமல் இருப்பதற்காக அடுத்த பக்கத்தில் இருந்து கல்லின் மீது திருப்பியுள்ளார்.

கல்லில் மோதினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அறிந்தே அவர் செய்த இந்த செயலினால் 10,000 அடி பள்ளத்தில் விழும் நிலையில் இருந்த பேருந்து விழாமல் தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளின் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் போக்குவரத்து சபையின் பரிசோதகராக செயற்படுகின்ற நிலையில் மறைய நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சாரதி இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது ஒரு மகன் 11ஆம் தரத்திலும் மகள் இரண்டாம் தரத்திலும் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு பகுதிக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில், பயணிகளை உயிரை காப்பாற்ற சாரதி ஒருவர் தன் உயிரை தியாகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.