Header Ads



உண்மை நண்பனாகவும், சகோதரனாகவும் உதவியது பாகிஸ்தான் – மைத்திரி பெருமிதம்


சிறிலங்கா- பாகிஸ்தான் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு வந்த பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர், தெஹ்மினா ஜன்ஜூவா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் சீனி மற்றும் சீமெந்து உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வருமாறும் அவர் பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலரிடம் அழைப்பு விடுத்தார்.

சீனி, மற்றும் சீமெந்துக்கு சிறிலங்காவில் அதிக தேவை இருப்பதாகவும் சிறிலங்காவுக்குத் தேவையான சீனியில் 20 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுபடுத்திய சிறிலங்கா அதிபர், இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்காலத்தில் சிறிலங்காவின் உண்மையான நண்பனாகவும், சகோதரனாகவும் பாகிஸ்தான் உதவிகளை வழங்கியது என்று தெரிவித்த சிறிலங்கா அதிபர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் அளித்த ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கு சிறிலங்கா ஆதரவு அளிக்கும் என்றும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சார்க் அமைப்பு முக்கியம் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை பலப்படுத்த தமது நாடு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவாகத் தாம் உரையாற்றியமை குறித்து மகிழ்ச்சியடையவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

கால்நடை மற்றும் பால் உற்பத்தி துறைகளில் சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் உதவிகளை வழங்கும் என்றும், அதுகுறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால், சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகாரச் செயலர், கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.