Header Ads



இலங்கையில் எரிபொருள், விற்பனைசெய்ய சீனா திட்டம் - நிராகரித்தது இலங்கை


அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சீன நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 3 பில்லியன் டொலர் முதலீட்டில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது.

இதற்கமைய, சீன தேசிய பெற்றோலிய நிறுவனத்தின் துணை நிறுவனமான, சீனாவின் ஹுவான்கியூ ஒப்பந்த மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் சான்டொங் டொங்மிங் பெட்ரோகெமிக்கல்  குழுமத்துடன் இணைந்து, அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தது.

இங்கு சுத்திகரிக்கும் எரிபொருளை உள்ளூரில் சந்தைப்படுத்த அனுமதிக்குமாறு சீன நிறுவனங்கள் கோரியிருந்தன.

ஆனால் அதனை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகவும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் கோரியிருப்பதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

‘சீன நிறுவனங்கள் உள்ளூர் சந்தையில் எரிபொருளை விநியோகிக்க அனுமதி கோரின.  ஆனால் நாங்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. உள்ளூர் விநியோகஸ்தர்களின் கேள்விப்பத்திரங்களில் பங்கேற்குமாறும், அவர்களுக்குத் தேவைப்பட்டால் விற்பனை செய்யுமாறும் நாங்கள் கூறியுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உள்ளூர் எரிபொருள் சந்தையை சீன நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 6 பில்லியன் டொலர் எரிபொருள் சந்தையை அரசதுறை நிறுவனமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், இந்திய நிறுவனமான, லங்கா ஐஓசி நிறுவனமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

“உள்ளூர் சந்தையில் எரிபொருளை விற்க விரும்பினால், தற்போது செயற்படும் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுமாறு சீன நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம், சீன நிறுவனங்களால் தற்போது செயற்படும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.