Header Ads



இஸ்லாம் என்றாலே அது கல்வியோடுதான் ஆரம்பிக்கின்றது, ஒரு முஸ்லிம் 4 மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டும் - பேராசிரியர் சந்திரசேகரம்



ஒரு முஸ்லிம் நான்கு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டும். நான்கு பாஷைகளையும் தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஒரு மனிதன் பதினைந்து மொழிகளைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவன் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்' என பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிட்டார். 

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 125 வது வருடாந்த நிறைவை முன்னிட்டு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

'முஸ்லிம்கள் மார்க்கத்தை விளங்க அரபு படிக்க வேண்டும். அறிவைப் பெற தாய்மொழியில் கற்க வேண்டும். உறவை வளர்க்க சிங்களத்தைக் கற்க வேண்டும். உலகை அறிய ஆங்கிலத்தைக் கற்க வேண்டும். தாய் மொழியில் திறமையுள்ளவன் ஏனைய மொழிகளைக் கற்பதிலும் விளங்குவதிலும் சிரமம் ஏதும் இருக்காது. இஸ்லாம் என்றாலே அது கல்வியோடுதான் ஆரம்பிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் வு. ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இத்தமிழ் கலைவிழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் உப அதிபர் எம்.நஹ்யா அவர்களும், சிறப்பு அதிதியாக சத்திய எழுத்தாளர் 'காதிபுல் ஹக்' கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கணி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட எம். நஹ்யா அவர்கள் தமது உரையில் 

'முஸ்லிம்களின் தாய்மொழி பற்றியும், கல்விமொழி பற்றியும் அறிஞர் சித்திலெப்பை, ஸேர் ராஸிக் பரீத், பதியுதீன் மஹ்மூத், அறிஞர் யு.ஆ.யு. அஸீஸ் ஆகியோர் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். சித்திலெப்பை அவர்களும் யு.ஆ.யு. அஸீஸ் அவர்களும் ஒரு முஸ்லிம் மாணவன் நான்கு மொழிகளையும் கற்க வேண்டும் என்ற விடயத்தில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்தனர். எனினும் 1943ம் வருடம் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையில், பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியானது தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது' என்று கூறினார்.


மேலும் கல்லூரியின் அதிபர், வு. ரிஸ்வி மரைக்கார், உபஅதிபர் அஷ்ஷெய்க் ஆ.யு.ஆ. மிஹ்ழார் (நளீமி), பகுதித்தலைவர் யு. பரீத் ஆகியோரும் உரையாற்றினர். இக் கலைவிழாவில் கிராமிய நடனம், நாடகம், பரதநாட்டியம், பிறைப்பாட்டு, கவியரங்கம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், தமிழ்த்தின விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வும் இடம் பெற்றன.  






1 comment:

  1. Well said Professor. There was a time where Muslim parents didn't allow their children to attend missionary school as the environment prevailed at that time was not favourable and hindrance to our religion ISLAM. Now no such things and we can learn more and more languages. It is a strength.

    ReplyDelete

Powered by Blogger.