Header Ads



ஜனவரி 27 ஆம் திகதி, உள்ளூராட்சி தேர்தல் - கட்சித் தலைவர்கள் இணக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகபூர்மாக அறிவிப்பதற்கும் அடுத்தவாரம் வர்த்தமானியை வெளியிடுவதற்கும் நேற்று (24) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம், அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தேர்தல்கள் தினத்தை அறிவிக்க வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது பொறுப்பாகும். பிரதமர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குரிய உத்தியோகபூர்வ அறிவிப்பை அமைச்சின் ஊடாக ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பதற்கு இணக்கம் வெளியிட்டனர். அத்துடன் இது தொடர்பிலான வர்த்தமானியை அடுத்தவாரம் வெளியிடவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்த கோரிக்கை, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டது.  

எமது கோரிக்கைகள் அடங்கலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளது. நாம் நல்லது செய்யும்போது குழப்புவதற்காகவே சிலர் முனைந்து வருகின்றனர். அதனை மக்கள் நன்கு அறிவார்கள். ஆதலால், நுவரெலியா மாவட்டம் தொடர்பில், அரசாங்கத்துடன் எமக்கு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை குறித்து, தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.