Header Ads



2 ஆண்டுகளில் 3 ட்ரில்லியன் ரூபாயை கடனாக மீளச்செலுத்த வேண்டியுள்ளது

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக, விசேட உரையொன்றை, நாடாளுமன்றத்தில் நாளை (20) ஆற்றவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (18) தெரிவித்தார். 

வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சால் முன்னெடுக்கப்படும் உடகம கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான, அசோக புரவின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில், விசேட அறிக்கையொன்றை வெள்ளிக்கிழமையன்று நான் விடுப்பேன். முதலீட்டாளர்களை கவர்வதற்கும் கிராமிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும், அரசாங்கம் எவ்வாறு திட்டமிடுகிறது என்பதை, நாட்டுக்கு நான் அறிவிப்பேன். அதேபோன்று, உயர் கடன் நிலைமையை, 2018ஆம் ஆண்டு எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை, நிதியமைச்சர் மங்கள சமரவீர, தனது பாதீட்டு உரையில், நவம்பர் 9, 2017இல் தெரிவிப்பார்” என்று, பிரதமர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் கடனை முகாமை செய்வது தொடர்பாகவே அரசாங்கம், 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டிலும் 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டிலும் கவனஞ்செலுத்துமெனக் குறிப்பிட்டதோடு, “அடுத்த 2 ஆண்டுகளில், 3 ட்ரில்லியன் ரூபாயை, கடனாக மீளச்செலுத்த வேண்டியுள்ளமையே இதற்கான காரணமாகும். இந்த அரசாங்கம், அதன் காலத்தில், இவற்றைச் செலுத்தும்” என்றும் குறிப்பிட்டார். 

அதேவேளை, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது தொடர்பாகவும், அரசாங்கம் கவனஞ்செலுத்துமென, அவர் குறிப்பிட்டார். “தேங்காய் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அதிகரித்துள்ளன. இந்த விலைகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்” என்று அவர் தெரிவித்தார்.   


No comments

Powered by Blogger.