Header Ads



ரோஹிங்ய மக்கள் தொடர்பிலான மனு, NFGG ஐ.நா. அலுவலகத்திடம் நேரில் கையளித்தது


ரோஹிங்ய மக்கள் தொடர்பிலான மனுவொன்றினை ( 7.9.2017) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( NFGG) இலங்கை ஐ.நா. அலுவலகத்திடம் நேரில்  கையளித்தது.

இம்மனுவினை கையளிக்கும் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தலைமைத்துவ சபை உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் வஹ்ஹாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கோரிக்கையை கையளிக்கும்போது, ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மியன்மார் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை நிறுத்துவதற்கு உடனடியாக ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்தியது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 'ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மியன்மார் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு மேலதிக ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. உலக மனித உரிமை அமைப்புக்களும், தலைவர்களும் ரோஹிங்ய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளனர். 

மியன்மார் அரசு சர்வதேச சட்டங்களை மதிக்காது செயற்படுகின்றது. பொது மக்களை படுகொலை செய்து, அவர்களது வாழிடங்களை அழித்து வருகின்றது. இதனை நிறுத்துவதற்கு ஐ.நா. சபை உடனடியாக தலையிட வேண்டும்.

ரோஹிங்ய மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. உடனடியாக எடுக்க வேண்டும். அதுவரையில், ரோஹிங்ய மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்கான இடைக்கால சூழ்நிலையையும் ஐ.நா. உருவாக்கிக் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

NFGGயின் மனுவினை கையேற்ற ஐ.நா. அலுவலக சிரேஷட பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில், 'நீங்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இவ்வாறு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் மனுக்களை முன்வைக்கும்போது, அவற்றை மேலிடத்துக்கு நகர்த்தி எம்மாலும் அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். நாம் உங்கள் கோரிக்கைகளை மேலிடத்துக்கு கொண்டு செல்வோம்' என்று உறுதி கூறினார்.

No comments

Powered by Blogger.