Header Ads



வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும், சருகுகள் போல் ரோஹின்யர்கள்..!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் பைகளைப்போல் மிதந்து மிதந்து வந்து கரை ஒதுங்கின அந்தச் சடலங்கள். இழுத்துப் போட்ட பிறகே எண்ணிப் பார்த்தார்கள்; பதினைந்து பெண்கள், பதினோரு குழந்தைகள். இது நடந்தது பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் என்னும் நகரில் உள்ள கடற்கரையில்.

எங்களுக்குக் கிடைத்தவற்றை மட்டுமே மீட்டிருக்கிறோம், கடலிலே கலந்து தொலைந்து விட்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை’ என்கிறார்கள் கரையோரம் பணிபுரியும் மக்கள். வருத்தத்தைக் காட்டிலும் அவர்கள் குரலில் அதிகம் தட்டுப்படுவது வெறுப்பே.

காரணம், இப்படி மனிதர்கள் மிதந்து வருவது அங்கே கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகி விட்டது.மிகச் சரியாக பங்களாதேஷுக்கும் பர்மாவுக்கும் நடுவில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையைப்போல் அமைந்திருக்கிறது நஃப் ஆறு.

ரோஹிங்கியா மக்களைப் பொறுத்த வரை இது வெறும் ஆறு மட்டுமல்ல, மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாலம். அதில் ஏறிவிட்டால், பர்மாவிலிருந்து விடுபட்டு பங்களாதேஷை அடைந்துவிட முடியும். ஆனால், அத்தனை எளிதானதல்ல இந்த மார்க்கம்.

கள்ளத்தனமாகத்தான் சென்றாக வேண்டும். கையில் அதிகக் காசில்லை என்பதால், சிறு கப்பல்களைத்தான் அமர்த்திக்கொள்ள முடியும். ஆட்டுமந்தைகளைப்போலத்தான் நெருக்கியடித்து அமர்ந்துகொள்ள முடியும். எப்போது வேண்டுமானாலும் நடுக்கடலில் கப்பல் கவிழலாம்; கடந்த புதனன்று நடந்ததைப் போல். அல்லது எப்போது வேண்டுமானாலும் பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பிடிபடலாம்.

கப்பலும் கவிழாமல் ஒருவரிடமும் மாட்டாமல் இருந்தாலும் மரணம் சாத்தியம்தான். செல்லும் வழியிலேயே பசி, குளிர், நோய் என்று பல காரணங்களால் கப்பலிலேயே சுருண்டு மாண்டிருக்கிறார்கள் பலர்.இருந்தும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் தினம் தினம் பர்மாவிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆபத்து என்று தெரிந்தேதான் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். காரணம் ஒன்றுதான். பர்மாவில் தங்கியிருப்பது என்பது இதைக் காட்டிலும் மோசமானது. அந்த வகையில் தப்பித்தல் என்பது அவர்கள் முன்னிருக்கும் ஒரு வாய்ப்பல்ல, அது ஒன்றுதான் உயிர்த்திருப்பதற்கான ஒரே வழி.

எல்லையைத் தாண்ட முடியாமல் பங்களாதேஷுக்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் இருக்கும் வங்கதேசத்து வீரர்கள் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு ஒரு விநாடி கண்களை மூடிக்கொண்டாலும், அவர்கள் அத்தனை பேரும் உள் நுழைந்து விடுவார்கள்.

பங்களாதேஷை ஆண்டுவரும் ஷேக் ஹசீனாவின் பயம் இதுதான். ரோஹிங்கியா என்றாலே அவர் குரலில் கோபமும், வெறுப்பும், சலிப்பும் கலந்து விடுகின்றன. ‘ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை நாங்கள் எங்கள் நாட்டுக்குள் அனுமதித்து விட்டோம்.

மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கருதியே இந்த உதவியை நாங்கள் செய்தோம். ஆனால், இப்போது அதுவே பிரச்னையாகிவிட்டது’ என்கிறார். அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் என்பது ஹசீனாவின் விருப்பம். பர்மாவுக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது ரோஹிங்கி யாக்களை அவர்களுடைய எல்லைகளுக்கு உள்ளேயே தடுத்துநிறுத்த உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பங்களாதேஷில் உள்ளவர்களின் பெரும்பான்மை கருத்தும் இதுவேதான். `நாங்களே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது எதற்கு அலையலையாக அகதிகளை அனுமதிக்க வேண்டும்? எப்போதாவது சிலர் என்றால் பாதகமில்லை; இதுவே ஒரு வழக்கமாகி விடுவதை அனுமதிக்கக் கூடாது அல்லவா?

பங்களாதேஷ் என்ன அமெரிக்காவா, ஐரோப்பாவா? அவர்களே பார்த்துப் பார்த்துதான் அகதிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்னும்போது நாம் மட்டும் கதவுகளை அகலமாகத் திறந்துவைத்துக்கொண்டு உள்ளேவரும் எல்லோரையும் வரவேற்று மகிழ வேண்டுமா?’ என்பது பங்களாதேஷின் குரல்.

ரோஹிங்கியாக்கள் பர்மாவிலிருந்து துரத்தப்படுவது இது முதன்முறையல்ல. மிக மோசமான முறையில் நடத்தப்படுவதும் கொல்லப்படுவதும்கூட புதிதல்ல. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நீண்டு வரும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதிதான் கடந்த மாத இறுதியில் பர்மாவின் மேற்குப் பகுதியில் மூண்ட ஒரு மதக்கலவரத்தில் 89 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிரிட்டனில் இருந்து செயல்படும் ரோஹிங்கியாக்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் கணிப்பின்படி சமீபத்தில் மட்டும் ஆயிரம் பேர் இத்தகைய கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் குடியிருப்புகள் கொளுத்தப் பட்டிருக்கின்றன. உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன அல்லது முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு கலவரமும் ஒவ்வொரு தாக்குதலும் ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதால், அவர்கள் உயிருக்குப் பயந்து எல்லாவற்றையும் போட்டது போட்டபடி பர்மாவிலிருந்து தப்பியோடுகிறார்கள். பர்மியர்கள் விரும்புவதும் இதைத்தான்.

இது எங்கள் நாடு. இனி இங்கே வராதே’ என்கிறார்கள் அவர்கள்.பங்களாதேஷ் மறுப்புச் சொல்வதற்குக் காரணம் ரோஹிங்கியாக்கள் அவர்களைப் பொறுத்தவரை அந்நியர்கள். ஆனால், அவர்களுடைய வாழ்விடமான பர்மாவும் இதையே சொல்கிறது என்றால், குழப்பமாக அல்லவா இருக்கிறது..?

No comments

Powered by Blogger.