Header Ads



இலங்கை பெண்களை பேஸ்புக் ஊடாக, தொடர்புகொள்ளும் மோசடி கும்பல் - ஏமாந்த பெண் வைத்தியர்

பிரித்தானியாவில் செயற்படும் மர்மகும்பல் ஒன்று இலங்கையிலுள்ள பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையிலுள்ள பெண்களை பேஸ்புக் ஊடாக தொடர்பு கொள்ளும் குறித்த மோசடி கும்பல், அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்வதாக தெரிய வந்தள்ளது.

இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்த பெண் வைத்தியர் ஒருவர், மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர் பேஸ்புக் ஊடாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை இளைஞருடன் பல மாதங்களாக நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாளடைவில் நட்பு ரீதியாக பழக்கமடைந்த வைத்தியருக்கு, பிரித்தானியாவிலிருந்து என்ன பரிசு பொருள் வேண்டும் என பிரித்தானிய நண்பர் கேட்டுள்ளார்.

அதற்கமைய சிறந்த கைப்பை ஒன்றை அனுப்புமாறு பெண் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பையில் பணம் வைத்து அனுப்பும் போது சுங்க பிரிவில் சிக்கினால் தண்டப்பணம் அறவிடப்படும் என இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் இளைஞர் ஒருவர், பெண் வைத்தியருக்கு அழைப்பேற்படுத்தி தான் கொழும்பு சுங்க பிரிவு அதிகாரி என குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட கைப்பையில் டொலர் கட்டுகள் உள்ளதனால், இதனை காப்பாற்றிக் கொள்ள 80 ஆயிரம் ரூபா சுங்க பிரிவில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த பணத்தை செலுத்துவதற்கு வங்கி இலக்கம் ஒன்றையும் குறித்த இளைஞர் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் அச்சமடைந்த வைத்தியர் தனது தொழிலுக்கு ஆபத்தாகிவிடும் என எண்ணி 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிட்டுள்ளார்.

இந்த பணம் வைப்பிட்டு ஒரு வாரத்தின் பின்னர் சுங்க அதிகாரி என கூறிய இளைஞர் மீண்டும் அழைப்பேற்படுத்தி இந்த கைப்பையில் பாரிய அளவிலான டொலர் கட்டுகள் உள்ளமையினால் மேலும் 2 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு செய்ய வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஏமாற்று வேலை என புரிந்து கொண்ட பெண் வைத்தியர், இது தொடர்பில் மாத்தறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

படித்த அறிவுள்ளவர்கள் இவ்வாறான மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வது என்பது பாரிய சிக்கலாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.