Header Ads



முதலாவது பெண் பேராசியராகக் ஹன்சியா றஊஃப் பதவியுயர்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முதலாவது பேராசியராக இப்பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவந்த கலாநிதி அஹமட்லெப்பை அப்துல் றஊஃப் அவர்களின் பாரியார் கலாநிதி திருமதி பாத்திமா ஹன்சியா றஊஃப் அவர்கள் பதவியுயர்வு செய்யப்பட்டுள்ளார். 

இப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசியராகக் கடமையேற்றிருக்கும் இவர் இப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாக இரண்டு தடவைகளும், முகாமைத்துவ பீடத்தின் பட்டப்பின்படிப்பு நிலையத்தின் இணைப்பாளராகவும், வெளிவாரிப்படிப்பு மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் இயக்குணராகவும், முகாமைத்துவத் திணைக்களத்தின் தலைவராகவும் பதவிகள் வகித்து அளப்பரிய சேவைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் இப்பீடத்தின் பீடாதிபதியாக இருந்த காலத்தில் சந்தைப்படுத்தல், மனிதவளம், தகவல் மேலாண்மை, நிதியியல் மற்றும் கணக்கீடு போன்ற விசேட கற்கைகளை அறிமுகப்படுத்தியதுடன் முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமானிக் கற்கையை உருவாக்கி இவையனைத்துக்குமான ஆளணிகளையும் ஏற்படுத்திய பெருமைக்குரியவர். 

சர்வதேச ஆய்வரங்குகளில் பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்ததோடு பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள இவர் தனது வியாபார நிருவாக இளநிலைப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், வியாபார நிருவாக முதுமானிப் பட்டத்தை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும், மனிதவள முகாமைத்துவம்சார் கலாநிதிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொழில்சார் வாழ்க்கையில் மிகப்பாரிய வெற்றிகளைச் சம்பாதித்த இவர் தனது குடும்ப வாழ்க்கையிலும் பல தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது மிகவும் மெச்சத்தக்கது. ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைகளில் வெற்றிவாகை சூடிய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாரான இவரது முதல் மகள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று கடந்த வருடம் களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டில் வாழும் இளம் முஸ்லிம் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இவரை மனமுவர்ந்து பாராட்டுவதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக முகாமைத்துவ வர்த்தக பீடம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.

ஊழியர்கள்
முகாமைத்துவ வர்த்தக பீடம்
தென்கிழக்குப் பல்கலைக் கழகம்.

1 comment:

  1. Congratulation on your growth.. May Allah bless our future Muslim women like you with well education

    ReplyDelete

Powered by Blogger.