Header Ads



மைத்திரிக்கும், மகளுக்கும் சேறு பூசுகிறாரா நாமல் ராஜபக்ஷ..?


அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

“ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

“ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன.

நாமலினால் குறித்த புத்தகம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி தந்தை” புத்தகத்தை கொள்வனவு செய்தமைக்கான காரணத்தை நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

“கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியை பார்வையிடுவதும் புத்தகங்களை கொள்வனவு செய்வதும் வழமையாகும்.

இந்த கண்காட்சிக்கு சென்று “ஜனாதிபதி தந்தை” புத்தகம் கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு நபர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

புத்தகம் மீதுள்ள ஆசை காரணமாகவும், இன்னுமொரு புத்தகம் என நினைத்து வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளவே இதனை கொள்வனவு செய்தேன்.

நான் ஏ.சி அறையில் இருந்தே சட்டம் தொடர்பான பட்டப்படிப்புக்கு பரீட்சை எழுதியதாகவும், என்னிடம் இருப்பது போலியான பட்டம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

எனது சகோதரரின் கல்வி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேறு பூசும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஜனாதிபதி தந்தை” புத்தகத்தை சத்துரிக்கா எழுதியாக கூறப்பட்ட போதும் அது வேறு ஒருவரே எழுதப்பட்டதாகவும், அதற்காக கொடுப்பனவுகள் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளதாக” நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால ஜனாதிபதியின் ஆரம்ப காலம் முதல் சமகாலம் வரையிலான அரசியல் நடவடிக்கைகளையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் “ஜனாதிபதி தந்தை” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் மகளினால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமலின் புதிய தகவலின் மூலம் மைத்திரி குடும்பத்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.