Header Ads



புதிய அரசியலமைப்பு மீது, பொதுவாக்கெடுப்பு அவசியம் - அஸ்கிரிய பீடம் வலியுறுத்து

அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் என்று, அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, நாடாளுமன்ற அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, நேற்றுமுன்தினம் கண்டியில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் கையளித்தார்.

இதன்போதே, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, ஆனமடுவ சிறி மம்மதாசி தேரர், புதிய அரசியலமைப்பு யோசனை மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் போதாது. நேரடியாக மக்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு, நிச்சயம் இந்த அரசியலமைப்பு வரைவு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று லக்ஸ்மன் கிரியெல்ல உறுதியளித்தார்.

அதேவேளை, இடைக்கால அறிக்கையைப் பெற்றுக் கொண்ட மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், எந்தவொரு அரசியலமைப்பின் கீழும், நிறைவேற்று அதிகார அதிபர் முறையைத் தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

எந்தவொரு அரசாங்கத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவே இருக்க வேண்டும். அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அரசாங்கம் மக்களுக்கும் நாட்டுக்கும் தேவையான நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.